கல்வியை போதிப்பது தான் ஆசிரியர் பணி, தங்களுக்கு வசதியான இடத்தில் பணி பெறுவது அல்ல – உயர்நீதிமன்றம்!

மாணவர்களுக்கு கல்வி, திறமைகளை போதிப்பது தான் ஆசிரியர் பணியின் நோக்கமே தவிர, தனக்கு வசதியான இடத்தில் பணி பெறுவது அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு…

மாணவர்களுக்கு கல்வி, திறமைகளை போதிப்பது தான் ஆசிரியர் பணியின் நோக்கமே தவிர, தனக்கு வசதியான இடத்தில் பணி பெறுவது அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு அதிகமான ஆசிரியர்கள் பணியாற்றுவதை கண்டறிந்த அரசு, உபரி ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு இடமாறுதல் செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, அப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றிய துரைராஜ், புவியியல் ஆசிரியர் சிங்காரவேலு, அறிவியல் ஆசிரியர் புவனேஸ்வரி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகள் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது இடமாற்றம் தொடர்பாக அரசின் அரசாணைகளுக்கு முரணாக இடமாற்றம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்ய கோரியும், திருத்துறைப்பூண்டி பள்ளியிலேயே பணியில் தொடர அனுமதிக்கும்படியும் பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, ஆசிரியர்களின் சேவை வேறு பள்ளிகளுக்கு தேவைப்படும்பட்சத்தில் அதை ஏற்றுக் கொண்டு தாமாக அப்பள்ளிகளுக்கு இடமாறுதல் பெற்று செல்ல வேண்டும் எனத் தெரிவித்தார். மாணவர்களுக்கு தேவையான கல்வியும், திறமையும் போதிக்க வேண்டியது தான் ஆசிரியர் பணியின் நோக்கமே தவிர, தனக்கு வசதியான இடத்தில் பணி பெறுவது அல்ல எனக் கூறிய நீதிபதி, தற்போது இடமாறுதலுக்கான கலந்தாய்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனவும், கலந்தாய்வில் ஆட்சேபங்களை தெரிவிக்கலாம் எனவும் கூறியதோடு, மனுதாரர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்க முடியாது என மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.