மயிலாடுதுறை அருகே சயனைடு கலந்த மது குடித்து உயிரிழந்த விவகாரத்தில் போலீசார் விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை தத்தங்குடியைச் சேர்ந்த பூராசாமி மற்றும் பழனி குருநாதன் ஆகிய இருவரும் அங்குள்ள கொள்ளு பட்டறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்கள். இந்த சம்பவம் குறித்து மயிலாடுதுறை ஏடிஎஸ்பி வேணுகோபால் தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது காவல் துறையிடம் பழனி குருநாதனின் உறவினர்கள் டாஸ்மாக் மதுபானம் அருந்தியதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த இருவரின் உடலும் கைப்பற்றப்பட்டு உடற்கூறு ஆய்விற்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனை நடைபெற்ற நிலையில் தடய அறிவியல் சோதனையும் நடைபெற்றது. அதில் குடிக்காமல் இருந்த ஒரு மது பாட்டிலில் சயனைடு விஷம் கலக்கப்பட்டு இருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முழு விபரங்கள் தெரியும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்தார்.
இந்நிலையில், குமாரமங்கலம் டாஸ்மாக் கடையின் சிசிடிவி காட்சிகள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது, சொத்து பிரச்சனை காரணமாக இறந்து போன பழனி குருநாதனின் சகோதரர் மனோகர் மற்றும் பாஸ்கர் ஆகியோர் மதுவில் சயனைடு கலந்து கொலை செய்ய முயற்சி செய்தது அம்பலமாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் பழனி குருநாதனின் சகோதரர்கள் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த ஒருவர் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







