ஸ்குவாஷ் உலக கோப்பை போட்டி : முதல் சுற்றில் ஹாங்காங் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

உலக கோப்பை ஸ்குவாஷ் தொடரின் முதல் ஆட்டத்தில் ஹாங்ஹாங் அணியை 3-0 என்ற ஆட்டக்கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. சென்னையில் ஸ்குவாஷ் உலக கோப்பை தொடர் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடைபெறுகிறது. இந்த…

உலக கோப்பை ஸ்குவாஷ் தொடரின் முதல் ஆட்டத்தில் ஹாங்ஹாங் அணியை 3-0 என்ற ஆட்டக்கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.

சென்னையில் ஸ்குவாஷ் உலக கோப்பை தொடர் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடைபெறுகிறது. இந்த தொடரை உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஸ்குவாஷ் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

இந்த தொடரில் எட்டு நாடுகளில் இருந்து முன்னணி வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். போட்டியில் பங்கேற்க உள்ள அணிகள் ஏ, பி என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ’ஏ’ பிரிவில் எகிப்து, ஆஸ்திரேலியா, கொலம்பியா, மலேசியா அணிகளும், ’பி’ பிரிவில் இந்தியா, ஜப்பான், தென்னாபிரிக்கா மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடரின் துவக்க விழாவை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடக்க நாளான இன்று காலை 10.30 மணிக்கு ஜப்பான்-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. தொடர்ந்து 1 மணிக்கு எகிப்து-ஆஸ்திரேலியா அணிகளும், 3.30 மணிக்கு மலேசியா-கொலம்பியா அணிகளும் மோதின. மாலை 6 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா – ஹாங்காங் அணிகள் மோதின.

இந்த போட்டியில் இந்திய அணி 3-0 என்ற ஆட்டக் கணக்கில் அணி ஹாங்காங் அணியை வீழ்த்தி, வெற்றி பெற்றது. இதன் மூலம் ஸ்குவாஷ் உலக கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய அணி தற்போது 2 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களான அபய் சிங் மற்றும் ஜோஸ்னா சின்னப்பா, சவுரவ் கோஷல் ஆகியோர் அசத்தலான விளையாட்டை வெளிப்படுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.