நெல்லை மாவட்டம் காவல்கிணறு சந்தையில் வரத்து குறைவாலும், தொடர் முகூர்த்தம் காரணமாகவும் வாழை இலை கட்டு ஒன்றுக்கு ரூ.1000 முதல் ரூ.1200க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
நெல்லை மாவட்டம் காவல்கிணறு சந்தைக்கு ராதாபுரம், திசையன்விளை மற்றும்
நாங்குநேரி தாலுகாவிற்கு உட்பட்ட ஊர்களில் இருந்து விவசாயிகள் வாழை இலைகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். கடந்த சில நாட்களாக வாழை இலையின் வரத்து அதிகமாக இருந்தது. இதனையடுத்து 150 இலை கொண்ட கட்டு ஒன்று ரூபாய் 200 முதல் 300 ரூபாய் வரை விற்பனையாகியது.
இதையும் படியுங்கள் : சிபிசிஎல் நிர்வாகத்தை கண்டித்து 11 நாட்களாக நடைபெற்று வந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ்!
இந்த நிலையில் இன்று வாழை இலை கட்டு ஒன்று 1000 முதல் 1200 ரூபாய் வரை விற்பனையானது. சந்தைக்கு கொண்டுவரப்படும் வாழை இலைகளின் வரத்து குறைவாக இருப்பதாலும், இன்று மற்றும் நாளை தொடர் முகூர்த்தம் இருப்பதாலும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த திடீர் விலையேற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.








