மதுபோதையில் பனைமர உச்சியில் ஏறி தூங்கிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுபோதையில் போதை தலைக்கேறி என்ன செய்வதென்றே தெரியாமல் மது குடித்தவர்கள் தடுமாறி வரும் செய்தியை பல இடங்களில் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் முழு போதையில் பனை மர உச்சிக்கு ஏறி சாவகாசமாக உறங்கிய நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆவல்சின்னாம்பாளையத்தில் சாலையோரம் இருந்த 120 அடி உயரமுள்ள பனை மரத்தின் மீதேறி ஒருவர் உறங்கிக் கொண்டிருந்ததை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையறிந்து ஏராளமான கிராம மக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சத்தம் போட்டு கூச்சல் எழுப்பிய போதும் அந்த நபரின் காதில் விழாமல் உறங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் அவரை கயிறு கட்டி மீட்க மேற்கொண்ட முயற்சியும் பயனளிக்கவில்லை.
பின்னர் ராட்சத கிரேன் மூலம் மேலே சென்று தீயணைப்பு வீரர்கள் பார்த்த போது அங்கு மது பாட்டில்கள் மற்றும் தின்பண்டங்கள் இருந்ததைக் கண்டனர். மரத்தில் ஏறி மது அருந்தியதால் மது போதையில் அங்கு உறங்கிய அந்த நபரை பத்திரமாக தூக்கி கிரேனின் இரும்பு கூண்டில் வைத்து தீயணைப்புத் துறையினர் கீழே கொண்டு வந்தனர்.
விசாரணையில் அவர் ஆனைமலை செம்மனாம்பதியைச் சேர்ந்த லட்சுமணன் என்ற கூலித் தொழிலாளி என்பது தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







