மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சர்ச்சை இல்லாமல் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் இன்று கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதானி குழும முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற உயர்மட்ட குழு விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இவ்விவகாரத்தில் நாடாளுமன்ற
உயர்மட்ட குழு விசாரிக்க மத்திய அரசுக்கு என்ன தயக்கம் உள்ளது? ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வந்த பிறகு, அதானி குழுமத்தின் பங்குகள் சரிபாதியாக குறைந்துவிட்டன. இதனால் அதானி குழுமத்தில் முதலீடு செய்த பொதுத்துறை நிறுவனங்களுக்கும், மக்களுக்கும் தான் பாதிப்பு ஏற்படும்.
நூறு நாள் வேலை திட்டத்துக்கு கடந்த பட்ஜெட்டில் ரூ.79 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய பட்ஜெட்டில் ரூ.60 ஆயிரம் கோடி என குறைக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய பட்ஜெட்டில் நூறு வேலை திட்டம், கிராமப்புற வளர்ச்சி, கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவைகளுக்கு நிதி குறைவாக ஒதுக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய நாட்களில், தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கனமழை காரணமாக பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு, ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசு ஈரப்பத விதிமுறைகளை தளர்த்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளார். இருந்தபோதிலும் கனமழையால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கு கோயில்களில் பொது வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறது. தமிழக அரசு இணக்கமான சூழ்நிலையை உருவாக்கி தீண்டாமை கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அதிமுக மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை. அதிமுகவில் வேட்பாளர் அறிவித்து, வேட்பு மனு தாக்கல் செய்வதற்குள் அக்கட்சி திணறிவிட்டது. அதேபோல அதிமுக சிதறி கிடக்கிறது.
அதிமுக வேட்பாளர் இரட்டை இலையில் நின்றால் வெற்றி பெற்று விடலாம் என்பது உண்மையல்ல. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தான் பர்கூர் தொகுதியில் ஜெயலலிதா தோல்வி அடைந்தார். அதேபோல மக்களவைத் தேர்தலிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு அதிமுக தோல்வி அடைந்தது. பாஜகவை தோளில் சுமந்து திரிவதால் அதிமுகவை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
தமிழக அரசு நிதி நெருக்கடியில் உள்ளது. படிப்படியாக வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என திமுக அரசு தெரிவித்துள்ளது. எனவே, இந்த ஆட்சி நீடிக்கும் வரை மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜகவை எதிர்த்து திமுக கூட்டணியில் போராடுவோம். மக்களுக்கான கோரிக்கையை வலியுறுத்துவோம். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்கும் விவகாரத்தில், சர்ச்சை இல்லாமல் அனைத்து தரப்பினரும் ஏற்கும் வகையில் அமைத்திட வேண்டும்” என்று கூறினார்.







