புதிய வகை கொரோனா; ஒமிக்ரான் BF-7 அறிகுறிகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள்

சீனாவில் கொரோனாவின் புதிய திரிபான ஒமைக்ரான் பிஎஃப் 7 வேகமாக பரவி வரும் நிலையில் அந்த வகை கொரோனாவின் அறிகுறிகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை தற்போது காணலாம். ஒமைக்ரான் பிஎஃப் 7 தொற்று…

சீனாவில் கொரோனாவின் புதிய திரிபான ஒமைக்ரான் பிஎஃப் 7 வேகமாக பரவி வரும் நிலையில் அந்த வகை கொரோனாவின் அறிகுறிகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை தற்போது காணலாம்.

ஒமைக்ரான் பிஎஃப் 7 தொற்று கொரோனாவின் மற்ற திரிபுகளைக் காட்டிலும் அதிக வீரியம் கொண்டதுடன் அதிவேகத்தில் பரவக் கூடியது. அதாவது இந்த வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் மூலம் பத்து முதல் 19 பேருக்கு பரவும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் இதற்கு முந்தைய கொரோனா திரிபுகளால் ஒருவர் மூலம் அதிகபட்சமாக 6 பேருக்கு மட்டுமே பரவும் நிலை இருந்தது. ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கபட்டவர்கள் மற்றும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ஆகிய அனைத்து தரப்பினரையும் ஒமைக்ரான் பிஎஃப் 7 தொற்று தாக்கக் கூடியது.


ஒமைக்ரான் பிஎஃப் 7 வகை தொற்று அதிவேகத்தில் பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்துவது மிகவும் சவாலான பணியாகும். கொரோனாவின் மற்ற திரிபுகளைப் போலவே இந்த புதிய வகை ஒமைக்ரான் பிஎஃப் 7 வகை தொற்றும் சுவாச மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் அறிகுறிகளைக் கொண்டது.

இந்த வகை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சளி, சோர்வு போன்ற அறிகுறிகளும் பாதிப்புகளும் ஏற்படும். குறைவான எண்ணிக்கையில் சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி கடுமையான உடல்நலக் குறைவை பிஎஃப் 7 தொற்று ஏற்படுத்தும்.  தடுப்பூசியால் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தியையும் மீறி இந்த புதிய வகை கொரோனா தொற்று பரவும் ஆற்றல் கொண்டது.

இதனிடையே இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள கொரோனாவின் மற்றொரு வகையான ஒமைக்ரான் எக்ஸ்பிபி என்ற திரிபு மிகவும் ஆபத்தானது மற்றும் சரியாகக் கண்டறிவது கடினம் என்பதால் அனைவரும் முகமூடியை அணிய வேண்டும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.


ஒமைக்ரான் எக்ஸ்பிபி தொற்று, டெல்டா மாறுபாட்டை விட 5 மடங்கு அதிக வீரியம் கொண்டது மற்றும் அதை விட அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

ஒமைக்ரான் எக்ஸ்பிபி நோயால் கண்டறியப்பட்ட பல நோயாளிகள் காய்ச்சல் மற்றும் வலி இல்லாதவர்கள் என வகைப்படுத்தப்பட்டதால் இதற்கு வெளிப்படையான அறிகுறிகள் இல்லை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.


எனவே, நெரிசலான இடங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், திறந்தவெளிகளில் கூட ஒன்றரை மீட்டர் தூரத்தை சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவறுத்தியுள்ளது.

இரட்டை அடுக்கு முகமூடியை அணிய வேண்டும் என்றும், கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

ஒமைக்ரான் எக்ஸ்பிபி அலையானது கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும் கொடியது என்பதால் பொதுமக்கள் அதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.