திருநள்ளாறு அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை கொலை செய்து வாய்க்காலில் வீசி சென்ற தாயை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு அத்திப்படுகை கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கழிவு நீர் வாய்க்காலில் அடையாளம் தெரியாத பெண் குழந்தை இறந்து கிடந்தது. பிறந்து சிலமணிநேரமே ஆன தொப்புள் கொடி அறுக்காத நிலையில் குழந்தை இறந்து கிடந்ததால், அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் தகவலறிந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ரேணுகா (வயது 35) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.
இதையடுத்து, அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்தபோது, ரேணுகாவிற்கு குழந்தை பிறந்தது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், திருமணத்தை தாண்டிய உறவால் குழந்தை பிறந்தது தெரியவந்தது. ஊரில் உள்ளவர்களுக்கு தெரியாமல் பார்த்து கொள்வதற்காக பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை தொப்புள் கொடி அறுக்காமல் அப்படியே வாக்காலில் வீசி கொன்றது அம்பலமானது.
பின்னர் ரேணுகாவை காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், அவரை புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர். பெற்ற தாயே குழந்தையை வாய்க்காலில் வீசி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– இரா.நம்பிராஜன்








