பரமத்தி வேலூர் அருகே இரு குழந்தைகளை வீசி, தாயும் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே ஜேடர்பாளையம் வெட்டுக்காட்டுபுத்தூரை சேர்ந்த தனசேகரன் (30). இவர் மினி சரக்கு லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி சசிகலா (26), மகன்கள் திவித் (5), தர்ஷன்(3) ஆகியோர் வழக்கம் போல் நேற்று இரவு தூங்க சென்றுள்ளனர்.
இன்று அதிகாலை தனசேகரன் கண் விழித்து பார்த்தபோது மனைவி, குழந்தைகள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது அருகில் உள்ள விவசாய கிணற்றில் மனைவி சசிகலா, குழந்தைகள் திவித், தர்ஷன் ஆகியோர் சடலமாக கிடப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக தகவலின் பேரில் அங்கு சென்ற நல்லூர் போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரு குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாயும் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது







