பீகாரில் பல மாதங்களாக மாயமாகி இறந்து விட்டதாக கருதப்பட்டவர், டெல்லியில் பிச்சை எடுத்த போது மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் பகல்பூர் மாவட்டம் நௌகாச்சியாவை சேர்ந்தவர் நிஷாந்த் குமார், கடந்த ஜனவரி 31ஆம் தேதி தனது மாமியார் வீட்டிற்கு திருமணத்திற்கு சென்றபோது மாயமானார். இது தொடர்பாக அவரது மைத்துனர் ரவிசங்கர் சிங் சுல்தாங்கஞ்ச் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும் நிஷாந்தின் தந்தையும் மகன் காணாமல் போனதற்கு மாமியார் குடும்பத்தினர் காரணம் என குற்றம்சாட்டினார். அவரை கடத்தி கொலை செய்துவிட்டதாகவும் அவர் கூறினார். இவ்வாறு இரு குடும்பத்தினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வந்த நிலையில் அதிர்ச்சியில் நிஷாந்த் குமார் உறவினர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், ரவிசங்கர் சிங், நொய்டாவில் உள்ள மோமோஸ் ஸ்டாலுக்கு சென்றுள்ளார். அப்போது கடைக்காரர் கிழிந்த உடையில் பிச்சைக்காரன் ஒருவனை விரட்டுவதை கண்டுள்ளார். அப்போது தனக்கு பசிப்பதாக கூறி உணவு தருமாறு அந்த பிச்சைக்காரர் கெஞ்சியுள்ளார். இதனையடுத்து அவருக்கு மோமோஸ் வாங்கி கொடுத்து ரவிசங்கர் விசாரித்துள்ளார்.அப்போது, பிச்சைக்காரர் நிஷாந்த் குமார் என தெரியவந்தது. இது தொடர்பாக டெல்லி போலீசில் ரவிசங்கர் சிங் புகார் அளித்தார். இதனையடுத்து நிஷாந்த் குமாரை மீட்ட போலீசார் பீகார் போலீசுக்கு தகவல் அளித்தனர். மேலும் அவர் டெல்லி எப்படி வந்தார் என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






