தஞ்சாவூர் கீழவாசல் பெரிய சாலையில், தரைப்பாலம் ஒன்று புதிதாக கட்டி, திறக்கப்பட்டு 10 நாட்களே ஆன நிலையில், பாலத்தின் மீது லாரி சென்ற போது, பாலம் உடைந்து லாரி உள்ளே சென்றது.
தஞ்சாவூர், பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகரில் முக்கிய பகுதியாக விளங்கி வருவது கீழவாசல். இப்பகுதியில் மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை பாத்திர கடைகள், மரக்கடைகள், பழைய இரும்பு வியாபார கடைகள், மெத்தை, பர்னிச்சர் கடை, ஜவுளி கடைகள் மற்றும் மீன் மார்க்கெட், சரபோஜி மார்க்கெட் உள்ளது. மேலும் வெள்ளை பிள்ளை யார் கோயில், வடபத்ர காளியம்மன் கோயில்கள் உள்ளன. இதனால் கடைவீதி மற்றும் கோயில்களுக்கு தினம்தோறும் ஆயிரக்கணக் கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. தார்ச் சாலையில் ஆங்காங்கே ஜல்லிக்கற்கள் கிடக்கிறது. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். இதற்காக பொலிவுறு நகரத் திட்டத்தில் நகரின் பல்வேறு இடங்களில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் நகரின் முக்கிய பகுதியான கீழவாசல் பகுதியில் உள்ள பெரிய சாலை ரோட்டில் புதிதாக தரைப்பாலம் ஒன்று கட்டப்பட்டு 10 நாட்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து, அந்த பாலத்தினை பொதுமக்களும், வாகன ஊட்டிங்களும் தற்போது பயன்படுத்தி வரும் நிலையில், பாலத்தின் மீது லாரி ஒன்று சென்ற போது, எதிர்பாராதவிதமாக பாலம் உடைந்து லாரி உள்ளே சென்றது. அப்போது, நல்வாய்ப்பாக லாரியின் பின்னால் யாரும் செல்லாததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
ஒப்பந்ததாரர் முறைகேடாக பாலத்தை கட்டியதால், பாலம் உடைந்ததாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
மேலும் இதுபோன்று தரமற்ற நிலையில் சாலைகள் மற்றும் பாலங்களை கட்டுவதனால் விபரீத நிகழ்வுகள் நடைபெற அதிக வாய்ப்புள்ளது என்பதனால், அதிகாரிகள் சரியான ஒப்பந்ததாரர்களை நியமித்து, தரமான சாலைகளை அமைக்க வேண்டும் என்று அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளனர். தரமற்ற சாலைகளை அமைத்து இதுபோன்ற நிகழ்வுகள் அவ்வப்போது அரங்கேறுவது இப்பகுதி மக்களை பெரும் வேதனைக்குள் ஆழ்த்தியுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா








