“திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கடந்த 5 ஆண்டு செயல்பாடுகள் பற்றி நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” – பாஜக கோரிக்கை!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கடந்த ஐந்தாண்டு கால செயல்பாடுகள் பற்றி நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பாஜக பிரமுகர் நவீன் குமார் ரெட்டி தெரிவித்தார். ராயலசீமா போராட்ட சமிதி அமைப்பாளரும்,  பாஜக பிரமுகருமான…

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கடந்த ஐந்தாண்டு கால செயல்பாடுகள் பற்றி
நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பாஜக பிரமுகர் நவீன் குமார் ரெட்டி தெரிவித்தார்.

ராயலசீமா போராட்ட சமிதி அமைப்பாளரும்,  பாஜக பிரமுகருமான நவீன் குமார் ரெட்டி
திருப்பதி பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது,

“திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கடந்த ஐந்தாண்டு கால செயல்பாடுகள் பற்றி நீதி விசாரணைக்கு புதிய அரசு உத்தரவிட வேண்டும்.  தேவஸ்தான நிர்வாக அதிகாரியாக இருக்கும் தர்மா ரெட்டி திருப்பதி மலையில் நடைபெறும் முறைகேடுகள் வெளியில் தெரியாதவாறு செயல்பட்டு வந்தார்.

கடந்த ஐந்தாண்டு காலத்தில் திருப்பதி மலையில் நடைபெற்றிருக்கும் முறைகேடுகள்
நம்ப இயலாத வகையில் உள்ளன.  முறைகேடுகளை தட்டி கேட்ட ஊடகவியலாளர்கள், என்னை போன்ற உள்ளூர் பிரதிநிதிகள்,  பக்தர்கள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  தேவஸ்தான அறங்காவலர் குழு எடுத்த முடிவுகளை தேவஸ்தானத்தின் வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யும் நடைமுறையை நிறுத்தி வைத்து விட்டார்கள்.

இதனால் தேவஸ்தான அறங்காவலர் குழு எடுத்த முடிவுகள் என்ன என்பது ரகசியமாகவே
வைக்கப்பட்டு வருகிறது.  10% கமிஷனுக்காக நிறைய வேலைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.  இவை அனைத்தும் தேவஸ்தான தலைமை கணக்காளருக்கு தெரியும்.  எனவே தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி,  தலைமை கணக்காளர் பாலாஜி மற்றும் முக்கிய அதிகாரிகள் ஆகியயோரிடம் நீதி விசாரணை செய்ய வேண்டும். தேவஸ்தான நிர்வாக அதிகாரியாக நேர்மையான மூத்த ஐஏஎஸ் அதிகாரியை மட்டுமே நியமிக்க வேண்டும்” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.