முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

நீல நெருப்பின், நிழல் போல அனல் பறக்கும் சுப்மன் கில் எனும் நாயகன்!

இந்திய அணியின் எதிர்காலத்திற்கு நம்பிக்கையளிக்கும் நட்சத்திரமாக வலம் வரும் சுப்மன் கில் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

இந்தியாவின் இளம் நட்சத்திரம் சுப்மன் கில் U19 கிரிக்கெட்டில் இருந்தே மிகவும் பிரபலமடைந்து வரும் மற்றும் வளர்ந்து வரும் நட்சத்திரமாக திகழ்கிறார். தனது விடா முயற்சியால் கிடைத்த வாய்ப்பை தக்க சமயத்தில் பயன்படுத்திக் கொண்ட கில், இப்போது இந்திய அணியின் ஓபனிங் ஸ்பாட்டில் ஆணி அடித்தது போல அமர்ந்து கொண்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தனக்கான பொசிஷனில் பேட்டிங் செய்வது என்றாலே சுப்மன் கில்லை அசைக்க முடியாத ஒரு சூழல் தான் நிலவி வருகிறது. அதற்கு ஏற்றார் போல, இந்திய கிரிக்கெட் அணிக்கு பக்கபலமாக இருந்து வரும் சுப்மன் கில் இப்போது இளம் வயதில் புரிந்திருக்கும் சாதனை இதுவரை இந்தியர்கள் யாராலும் செய்ய முடியாத ஒன்றாக பார்க்கப்படுகிறது.

அஹமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா, நியூசி அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டியில் சுப்மன் கில் சதம் விளாசி, இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் சதம் அடித்த இளம் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதேபோல இதுவரை இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இருந்த விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரின் சாதனையும் முறியடித்துள்ளார் சுப்மன் கில்.

நியூசிக்கு எதிரான கடைசி போட்டியில் சுப்மன் கில் வெறும் 63 பந்துகளில் ருத்ர தாண்டவம் ஆடி 126 ரன்கள் குவித்தார். இதுவே இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில், ஒரு இன்னிங்சில் இரு பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ரன்கள் ஆகும். முன்னதாக விராட் கோலி 122 ரன்கள் உடன் முதல் இடத்திலும், ரோஹித் ஷர்மா 118 ரன்கள் உடன் இரண்டாம் இடத்திலும் இருந்த நிலையில், சுப்மன் கில் அந்த சாதனையை முறியடித்து முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதுமட்டுமல்லாமல், டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று ஃபார்மெட்டிலும் சதம் விளாசிய இளம் வீரர் என்ற பெருமையையும் தன்னகப்படுத்தியுள்ளார் சுப்மன் கில். இதற்கு முன்னதாக ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலி என ஒவ்வொருவரும் மூன்று வகை போட்டிகளிலும் சதம் விளாசிய வீரர்கள் என்ற பட்டியலில் இருந்தாலும் கூட, இவர்களுள் இளம் வயதிலேயே இந்த சாதனை படைத்தவர் என்ற பெருமையை பெற்றும், மூன்று வடிவங்களில் சதம் அடித்த 5 வது வீரர் என்ற பெருமையை பெற்றும் கம்பீரமாக தன்னை வழிநடத்தி வருகிறார் இந்த இளம் நட்சத்திரம்.

சுப்மன் கில் இந்திய அணியின் வருங்காலம் என குறிப்பிட்டு வரும் இந்திய முன்னணி வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில், நான் இருக்கிறேன் என்று நம்பிக்கை வாக்கு சொல்வது போல், இந்த வருடத்தில் மட்டும் நியூசி அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 208 ரன்கள் விளாசி முதல் இரட்டை சதமும், கடைசி ஒருநாள் போட்டியில் 112 ரன்கள் அடித்து சதமும், டி20 தொடரின் கடைசி போட்டியில் 126 ரன்களும் என விளாசி தன் திறனை நிரூபித்துள்ளார்.

சுப்மன் கில் U19 அணியில் இருந்தபோது அந்த அணியின் பயிற்சியாளராக, இப்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் U19 அணியின் பயிற்சியாளராக இருந்து வந்தார். அப்போது இருந்த அந்த அனுபவத்தை இப்போது செயல்படுத்தும் ராகுல் டிராவிட், சுப்மன் கில் காம்போ இந்திய அணியின் ஓபனிங் ஸ்பாட்டில் இருந்துவந்த குறையை நீக்கி வருவதுடன், சுப்மன் கில் எனும் நம்பிக்கை நட்சத்திரத்தை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி வருகிறது.

– நந்தா நாகராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை படமாக எடுக்கிறோம்; பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட தயாரிப்பாளர்

EZHILARASAN D

கணவருடன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட 8 மாத கர்ப்பிணி!

Jayapriya

கச்சத்தீவை நிரந்தரமாக மீட்டெடுக்க வேண்டும்- பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை

Jayasheeba