ராமநாதபுரம் அருகே மகன் பரிசாக வழங்கிய சொகுசு காரில் தந்தை மீன் வியாபாரம் செய்து வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தந்தை மகனுக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை எண்ணோற்றம் கொள் எனும் சொல்
என்ற குறளுக்கு ஏற்ப ராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன் வயல் கிராமத்தில் வசித்து வருபவர் சிவானந்தம், காளியம்மாள் தம்பதி. இவர்களுக்கு சுரேஷ் கண்ணன் என்ற ஒரு மகனும், இரு மகள்களும் உள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தனது மீன்பிடித் தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது மகனை நல்ல
நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பது சிவானந்தத்தின் ஆசை. மரைன் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்த மகன் சுரேஷ் கண்ணனுக்கு பல்வேறு இடங்களில் கடன் வாங்கி மரைன் படிக்க வைத்தார் தந்தை சிவானந்தம்.
படிப்பை முடித்த சுரேஷ் கண்ணனுக்கு வெளிநாடு கப்பல் நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து அவர் சிங்கப்பூர் சென்று பணியாற்ற தொடங்கினார். பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு படிக்க வைத்து நல்ல நிலைக்கு உருவாக்கிய தாய் தந்தைக்கு கைமாறாக ஏதாவது செய்ய வேண்டும் என சுரேஷ் கண்ணன் நினைத்துள்ளார்.
இதனையடுத்து 25 லட்சம் மதிப்பிலான ஏசி சொகுசு கார் ஒன்றை பெற்றோருக்கு அவர் வாங்கிக்கொண்டுத்துள்ளார். ஆனால் மகன் வாங்கிக்கொடுத்த காரில் மீன் வியாபாரம் செய்து வருகிறார் தந்தை. ராமநாதபுரம் உச்சிப்புளி
கீழக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று மொத்த வியாபாரிகளிடம் மீன் விற்பனை செய்து வருகிறார் அவர்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, ” மீன் விற்பனை எங்கள் குடும்பத்தொழில் . இருதய அறுவை சிகிச்சை செய்துள்ளதால் மீன் விற்க செல்ல வேண்டாம் என கூறிய மகன், கார் ஒன்றும் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் என்னால் வீட்டில் சும்மா இருக்க முடியாது. எனவே மீன் விற்பனைக்கு செல்கிறேன். இந்த கார் வியாபாரத்திற்கு நல்ல வசதியாக உள்ளது. நான் விலை உயர்ந்த சொகுசு காரில் சென்று மீன் விற்பனை செய்வதை சிலர் ஆச்சரியமாகவும் வேடிக்கையாகவும் பார்க்கிறார்கள். ஆனால் எனக்கு அதைபற்றி கவலையில்லை.
எனது உயிர் உள்ளவரை இந்த தொழிலை நிறுத்த மாட்டேன் என கூறினார் சிவானந்தம். பெற்றோரை முதியோர் இல்லத்தில் கொண்டு சேர்க்கும் இன்றைய காலகட்டத்தில் , தனது மகன் செய்துள்ள காரியம் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார். மகன்கள் கார்கள் வாங்கி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை கடைசி காலத்தில் கஞ்சி
ஊற்ற வேண்டும் என்பதே அனைத்து பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆம் சுரேஷ் கண்ணன் மட்டுமல்ல, மீன் பிடி தொழிலும் சிவானந்தத்திற்கு மற்றொரு மகன் தான்…