ஒரகடத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில்
டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள
தொழில்நுட்ப மையங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தொழிற்சாலைகளில் நவீன தொழில்நுட்பங்களில் தேர்ந்த தொழிலாளர் தேவையை பூர்த்தி செய்யவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் தமிழகத்தில் இயங்கி வரும் 71 தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ2877.43 கோடி மதிப்பீட்டில் 4.0 தர நிலையிலான தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதில் 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 762.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில்
டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0
தொழில்நுட்ப மையங்கள் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் ரூ3.73 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 4.0 தர தொழில்நுட்ப மையத்தை தொடங்கி வைத்தார்.
புதிதாக திறக்கப்பட்ட தொழில்நுட்ப மையத்தில் நவீன இயந்திரங்கள், வன்
பொருட்கள், மென் பொருட்கள் மற்றும் மின்சார வாகனங்கள் உள்ளிட்டவை
நிறுவப்பட்டுள்ளன. இந்த வசதிகளை கொண்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் நடப்பு கல்வியாண்டு முதல் ரோபோடிக்ஸ், புதிய தயாரிப்புகள், மின்சார வாகனங்கள் மற்றும் உற்பத்தி செயல்முறை, கட்டுப்பாடு ஆகிய புதிய தொழிற்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது
இந்நிகழ்வில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் , சிறு குறு
நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தாமோ அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர்
நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு, ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர்
செல்வப்பெருந்தகை, டாடா குழும தலைவர் சந்திர சேகரன் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்ச்சித்துறை ஆணையர் வீரராகவ்ராவ், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.







