ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே கோயில் திருவிழாவை
முன்னிட்டு நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில், ஒற்றை
சக்கரத்தில் ஓடி காளைகள் முதலிடத்தை பெற்று தந்தது.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஸ்ரீ வன பேச்சி அம்மன் 13 ஆம் ஆண்டு
வருடாபிஷேக விழாவை முன்னிட்டு, சின்ன மாடு மற்றும் பெரிய மாடு
என இரண்டு பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றன.
இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை,சிவகங்கை மற்றும்
ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டி
பந்தய வீரர்களும், காளைகளும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
பந்தயத்தில் பங்கேற்ற காளைகள் வெற்றி இலக்கை நோக்கி சீறி பாய்ந்து
சென்றது. இந்நிலையில், ஒரு பந்தய வீரரின் மாட்டுவண்டியின் ஒரு சக்கரம்
முறிந்து சேதமடைந்தது. ஒற்றை சக்கரத்திலும் அனைத்து காளைகளையும்
இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு முந்தி சென்று, வீரருக்கு முதல் பரிசை
பெற்று தந்தது பார்வையாளர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.
மேலும், பந்தயத்தை காண்பதற்கு சுற்றுவட்டார பகுதியில் இருந்து
ஏராளமான பொதுமக்கள், சாலையில் இருபுறமும் நின்று வேடிக்கை
பார்த்து மகிழ்ந்தனர். இறுதியாக முதல் மூன்று இடங்களை பிடித்து
வெற்றி பெற்ற காளைகளுக்கும், பந்தய வீரர்களுக்கும் கிராமத்தின்
சார்பாக பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
-கு. பாலமுருகன்







