27.8 C
Chennai
April 27, 2024
கட்டுரைகள் சினிமா

ஆடைபோல உணவும் தனி மனித விருப்பத்திற்கு உட்பட்டதுதான்: இயக்குநர் தமிழ்


- அந்திப்பேரொளி

எழுத்தாளர் பெருமாள் முருகனின் வறுகறி சிறுகதையை மையக்கருவாக கொண்டு உணவு, கல்வி, சாதி அரசியலை ஆழமாக பேசியுள்ள திரைப்படம் சேத்துமான். ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. தமிழ் சினிமா கடந்த காலங்களில் பேசாத அல்லது பேச மறுத்த கதைகளையும், வாழ்வியலையும், சமீப காலமாக வெளியாகும் சினிமாக்களில் பார்க்கமுடிகிறது. அப்படியான படங்களில் சேத்துமான் ஒரு முக்கிய இடத்தை பிடித்ததோடு, நேர்மையான உரையாடலை தொடங்கியுள்ளது.

அந்தி மங்கும் ஒரு மாலைப் பொழுதில் ‘சேத்துமான்’ இயக்குனர் தமிழிடம் திரைப்படம் குறித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

“ஈரோடு மாவட்டத்துல ஒரு எளிய குடும்பத்துல பிறந்தவன் நான். ஈரோடு கலைக் கல்லூரியில் படிச்சேன். எல்லா இளைஞர்களைப் போல எனக்கும் சினிமா பார்க்குற பழக்கம் இருந்துச்சு. எங்க அண்ணன் நிறைய படங்கள் பார்ப்பார். என்னையும் அழைச்சுட்டு போவாரு. அப்படித் தான் சினிமா மீது ஆர்வம் வந்துச்சு…அந்த விதைதான் இப்போ என்ன இயக்குனரா மாற்றியிருக்கு” என்றவாறு நம்முடைய கேள்விகளுக்கு பதிலளிக்கத் தொடங்கினார்.

படம் பண்ணனும்னு எப்போ முடிவு பண்ணீங்க?

“சினிமா ஆசையில 2002ல இருந்து 2006 வரைக்கும் படம் பண்ணாம இனி வீட்டுக்கு வரமாட்டேன்னு சென்னைக்கு அடிக்கடி வந்துடுவேன். சென்னையில எனக்கு யாரையும் தெரியாது. அதனால ரெண்டு மூனு நாள் இருந்துட்டு மறுபடியும் ஊருக்கே போயிடுவேன். வீட்ட விட்டு வெளியவே வரமாட்டேன். எதும் பண்ண முடியலையேனு அவமானமா இருக்கும், சில சமயங்கள்ல சினிமாவே நமக்கு செட் ஆகாது… கல்யாணம் பண்ணி என்னுடைய பையன வேணும்னா, சினிமாவுல பெரிய ஆளா ஆக்கலாம்னு தோணுச்சு.


பிரிண்டிங் தொழில்ல கொஞ்சநாள் இருந்தேன், சென்னையில வீடியோ கவரேஜ் பண்ற இன்ஸ்ட்டிடியூட் இருக்கு அங்க போய் சேர்ந்து, கத்துக்கிட்டு ஸ்டூடியோ வெக்க போறேன்னு ஒரு காரணம் சொல்லிட்டி வீட்ல இருந்து சென்னைக்கு வந்தேன்.. அந்த சமயத்துல இயக்குனர் ராஜீவ் மேனன் சினிமா தொடர்பான வகுப்புகளை தொடங்கி இருந்தாரு. அங்க சேர்ற அளவுக்கு என்கிட்ட பணம் இல்ல.

ஒரு வாட்டி ராஜீவ்மேனன் சாரப் பார்த்தேன். அவர், “நீங்க டைரக்டரா ஆகனும்னா கதை எழுதி யாராவது ஒரு இயக்குனர்கிட்ட உதவி இயக்குனரா சேர்ந்து ஒர்க் பண்ணுங்க. அப்புறம் படம் பண்ணுங்கனு சொன்னாரு”அப்புறம், பட்டாளம் படத்துல உதவி இயக்குனரா சேர்ந்து வேலை பார்த்தேன்.. வெங்கட் பிரபு படங்கள்ல உதவி இயக்குனரா இருந்தேன். 4 குறும்படங்கள் இயக்குனேன். அடுத்து படம் பண்ணனும்னு முடிவு பண்ண”

வறுகறி சிறுகதைய படம் பண்ணனும்னு ஏன் முடிவு பண்ணீங்க?

“ஈரானிய சினிமாக்கள் மீது எனக்கு அதிகமான ஆர்வம் உண்டு. உலக சினிமாக்களில் பெரும்பாலும் ஒரு எழுத்தாளருடைய கதைகளைத்தான் சினிமாவா எடுத்திருப்பாங்க. அதே மாதிரி ஒரு எழுத்தாளருடைய கதைய படமா எடுக்கலாம்னு முடிவு பண்ணி இருந்தேன். பெருமாள் முருகனுடைய வறுகறி சிறுகதை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

கதையாவும், பட்ஜெட்டாவும் இந்த கதை எனக்கு சரியா இருக்கும்னு தோணுச்சு. பெருமாள் முருகனை சந்திச்சு விபரங்கள சொன்னேன். அவரும் சரின்னு சொன்னாரு.

பா.ரஞ்சித்தின் நீலம் நிறுவனம் படத்தை தயாரிக்க முடிவு செய்தது எப்படி?

நிறைய தயாரிப்பாளர்கள சந்திச்சு பேசுனேன். இன்னைக்கு பண்ணிடலாம், நாளைக்கு பண்ணிடலாம்னு சொன்னாங்க ஆனா வேலை நடக்கவே இல்ல. ஒரு கட்டத்துல நானே படத்த தயாரிக்கலாம்னு முடிவு பண்ணி அதற்கான முயற்சில ஈடுபட்டுட்டு இருந்தேன். படத்துக்கான பட்ஜெட் போட்டு பார்த்தேன். என்னால பண்ண முடியாதுனு தோணுச்சு.

இப்ப இருக்க சூழல்ல இப்படி ஒரு படத்தை, இயக்குநர் இரஞ்சித் தவிற வேறு யாரு பண்ண முடியாதுனு ஒரு தீர்மனத்துக்கு வந்தேன். அவர போய் நேர்ல சந்திச்சேன். அவரும் வெங்கட் பிரபுவோட உதவி இயக்குனரா இருந்தவரு, அதனால் ஏற்கனவே இரஞ்சித்த எனக்கு தெரிஞ்சிருந்தது.

இப்படி ஒது கதை இருக்கு படம் பண்ணலாம்னு இருக்கேன். எங்கிட்ட பணம் குறைவா இருக்கு நீங்க உதவி பண்ணனும்னு சொன்னேன். படத்தோட ஒன்லைன் கேட்டு கதை, திரைக்கதை எழுத்திட்டு வாங்கனு சொன்னாரு. எழுதிட்டு போய் பார்த்தேன். படம் பண்ணிடலாம். நீங்க சிரமப்பட வேண்டாம்னு சொல்லிட்டார். நீலம் நிறுவனமே படத்தை தயாரித்தது.

சிறுகதையை மையமா வைத்து திரைக்கதையில் நீங்கள் கூடுதலாக சேர்த்தவை என்னென்ன?

“சிறுகதையில 1980களில் திருச்செங்கோடு பகுதியில் நடந்த உணவு அரசியல பேசியிருக்கும் சம்பவமா பெருமாள் முருகன் எழுதி இருப்பாரு. அத நான் 2017 நடந்த கதையா மாத்தி இருக்கேன். கல்வி அரசியல், சாதி அரசியல், கொங்கு மண்டலத்தில் பேசக்கூடிய வட்டார வழக்கு மொழிய ரியலிஸ்டிக்கா காட்டனும்னு வசனங்கள திருத்தி இருந்தேன். அதற்கு ஏற்ற மாதிரியே நடிகர்களையும், புது முகங்களா தேர்ந்தெடுத்துகிட்டேன். படத்துல நடிச்ச அத்தனை நடிகர்களும் சிறந்த நடிகர்கள்.
வெயிலோடு தாக்கம் படத்துல இருக்கனும்னு மே மாதத்துல இந்த படத்த எடுக்கனும்னு முடிவுபண்ணி இருந்தேன்.அது கதைக்கும் தேவைப்பட்டுது. அதனால நான் நாமக்கல் மாவட்டத்த தேர்ந்தெடுத்துகிட்டேன்.

உணவு அரசியலை பேசுவதற்கான தேவை இருக்கிறதா?

இன்னைக்கு காலகட்டத்தில் அதற்கான தேவை இருக்குனு நான் நினைக்குறேன்.. மாட்டு கறி, பன்றி கறி சாப்பிடக்கூடியவர்களை இழிவாக பார்க்கக்கூடிய நிலை இருக்கிறது. மாட்டுக் கறி வைத்திருந்தவர்களை கொலை செய்த வரலாறுலாம் நம்மோட நாட்டுல இருக்கு. பன்றி சாப்பிடுகிறவர்களை மாட்டு கறி சாப்பிடுகிறவர்கள் ஒரு விதமா பார்க்குற பார்வையும் இங்க இருக்கு அதெல்லாம் ஒன்னும் இல்ல. ருசியா இருந்தா, உனக்கு பிடிச்சிருந்தா நீ சாப்பிடு. ஆடை போல உணவும் தனி மனித விருப்பத்திற்குட்பட்டதுதான் என்பதை பேசனும்னு நினைச்சேன். அதை திரைக்கதையா பேசி இருக்கேன்.

திரையரங்கில் வெளியிடாமல் ஓடிடிக்கு படம் போனதுக்கு காரணம் என்ன?

திரையரங்கில் படம் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தும்னுதான் நினைச்சேன்.. ஆனா கொரோனா வந்து ஓடிடியோட வளர்ச்சிய அதிகபடுத்திடுச்சு. மக்கள், பிரமாண்டமான திரைப்படங்கள மட்டும்தான் தியேட்டர்ல பார்க்குற மனநிலைல இருக்காங்க. மற்ற எல்லா படங்களையும் ஓடிடிலையே பல முறை பார்த்துடுறாங்க.என் படம் மக்கள் கிட்ட போய் சேரனும்னு நினைச்சேன் அது சரியா போய் சேர்ந்திருக்குனு நினைக்குறேன். பொருளாதார ரீதியாவும் ஓடிடி தளம் நம்பிக்கையையும் லாபத்தையும் கொடுத்து இருக்கு.

திரைப்படங்களின் கதை மாந்தர்களை எப்படி தேர்வு செய்தீர்கள்?

பூச்சிங்குற தாத்தா, வயதான பக்குவப்பட்ட ஒரு கதாபாத்திரமா வெச்சுருந்தேன். அதே சமயம் சமரசம் இல்லாத இன்றைய காலகட்டத்தில் அடக்குமுறைகளை எதிர்த்து நிர்க்கக்கூடிய ஒரு கதாபாத்திரம் தேவைப்பட்டுச்சு. அதுதான் ரங்கனோட கதாபாத்திரம்.

கந்தாயி கதாபாத்திரத்தில் நடிச்சவங்க பேரு கண்ணிகா. நாமக்கல இருந்து திருச்செங்கோடு போற வழியில எலிமேடுனு ஒரு கிராமம் இருக்கு. அங்க கூத்து வாத்தியார் வடிவேலுனு ஒருத்தர் இருக்காரு அவருடைய பொண்ணு அவங்க. கிராமங்கள்ல  இருக்கக்கூடிய ஒரு எளிமையான அத்தை கதாபாத்திரம் தேவை பட்டுச்சு. கண்ணிகா அதை சரியா பண்ணி குடுத்துட்டாங்க.

பன்றி, சேத்துமான் ஆனதுக்கான காரணம்?

பன்றினு சொல்றதுல எனக்கு எந்த தயக்குமும் இல்ல. பன்றிக்கு ஒவ்வொரு ஊர்லையும் ஒவ்வொரு பெயர் சொல்றாங்க.எனக்கு இந்த பேர் புடிச்சிருந்துச்சு. பன்றி சேத்துலதான் பெரும்பாலும் இருக்கும், சேத்துல இருக்கக்கூடிய மான். அதுனால அத சேத்துமான்னு சொல்றது பொருத்தமா இருந்துச்சு அதனால அந்த பேர பயன்படுத்திகிட்டேன்.

– அந்திப்பேரொளி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading