விவாதம் என்பதே சமுதாயத்தில் இருக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை நோக்கி, நாடு பயணித்துக்கொண்டிருப்பதாக மக்களவை உறுப்பினர் கனிமொழி வேதனை தெரிவித்துள்ளார்.
கவிஞர் அரூர் புதியவன் எழுதிய “சூடு” என்ற கவிதை நூலின் வெளியீட்டு விழா, சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது. மாநில கொள்கை வளர்ச்சிக் குழும துணைத் தலைவர் ஜெயரஞ்சன் மாநில சிறுபான்மை jayaranjaஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், மக்களவை உறுப்பினர் கனிமொழி, கவிதை நூலை வெளியிட மனித நேய மக்கள் கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய கனிமொழி, மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பக்கூடியவர்கள் மீது நக்சல், தேச துரோகிகள் என்ற முத்திரை குத்தப்படுவது குறித்து விமர்சனம் செய்தார். மேலும், கேள்வியே கேட்கப்படாத சமூகம் சீரழிந்து போகும் என கனிமொழி எச்சரிக்கை விடுத்தார்.
ரௌத்திரத்துடன் எழுதப்பட்டுள்ள கவிதைத் தொகுப்பாக “சூடு” உள்ளது எனவும், சாதி, மதம், உணவால் மக்களை பிரிக்கும் பாகுபாடு, எதை உண்ணலாம்? எதை உண்ணக்கூடாது? என்பது போன்ற விஷயங்களை சூட்டோடு சூட்டாக பேசியிருக்கிறது “சூடு” கவிதைத் தொகுப்பு என கனிமொழி எம்.பி தெரிவித்தார்.








