தேசிய கீதம் தந்த மகாகவி ரவீந்திரநாத் தாகூரிடம் பாராட்டு பெற்ற தமிழ்த்திரைப்பட பின்னணி பாடகர் யார் தெரியுமா?
காவியமா… நெஞ்சின் ஓவியமா… அதன் ஜீவிதமா தெய்வீக காதல் சின்னமா?…என்ற இந்தப்பாடலை கேட்டு ரசிக்காத யாரும் இருக்கமுடியாது.. அவர் இசைச்சித்தர் எனப் போற்றப்படும் சிதம்பரம் சி.எஸ் ஜெயராமன்தான், சிறுவயதிலேயே பாட தொடங்கிய அவர், தமிழ்த்திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதருக்கு இரண்டு ஆண்டுகள் இசைப் பயிற்சி அளித்தவர் சி.எஸ்.ஜெயராமன். சம்பூர்ண ராமாயணம் திரைப்படத்தில் இவர் பாடிய “இன்றுபோய் நாளை வாராய்”, பராசக்தி திரைப்படத்தில் “கா…கா…கா” பாடல், புதையல் திரைப்படத்தில் “விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே” போன்ற பாடல்கள் ஜெயராமனை, ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்க வைத்தன.
தெய்வப்பிறவி திரைப்படத்தில் “அன்பாலே தேடிய என்” என்ற பாடலுக்கு இடையில் ‘ஹம்மிங்’ பண்ண ஒல்லியான ஒரு பெண்ணும் வந்திருக்கிறார். குரல் சரியில்லை என அவரை அனுப்ப முயற்சித்தபோது ஜெயராமன் தடுத்து அவரைப் பாட வைத்திருக்கிறார். அப்படி ‘ஹம்மிங்’கில் தொடங்கி பிரபலமானவர்தான், கொஞ்சும் குரலரசியும் பின்னணிப் பாடகியுமான எஸ்.ஜானகி.
இன்றளவும் எம்ஆர் ராதாவின் பெருமை பேசும் ரத்தக்கண்ணீர்’ திரைப்படத்திற்கு இசையமைத்ததோடு குற்றம் புரிந்தவன் வாழ்வினில் என்ற பாடலையும் பாடினார். எம்.ஜி.ஆருக்கு புதுமைப்பித்தன் உட்பட மூன்று படங்களுக்குப் பின்னணி பாடியிருக்கிறார்.
1934 ஆம் ஆண்டில் கிருஷ்ண லீலா என்ற திரைப்பட படப்பிடிப்புக்காக, சென்னையில் ஸ்டூடியோ இல்லாததால் கொல்கத்தா சென்றனர்.. “ஒரு நாள் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், மரத்தடியில் தாடியோடு இருந்த முதியவர் வந்து என்னை பாடச் சொன்னார். பாடினேன். ஆசீர்வதித்த அவர்தான் ரவீந்திரநாத் தாகூர் என்பதை பின்னர் அறிந்து கொண்டேன்” என குறிப்பிடுகிறார் ஜெயராமன்…
ஜெயராமன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உறவினர் என்பது தெரியும். மேடைக் கச்சேரியில் ‘வாழிய செந்தமிழ்’ பாடலைப் பாடித்தான் கச்சேரியை முடிப்பார் என்பது தெரியுமா?… காலங் கடந்தும் நம்கண்முன் நிழலாடும் காவியமா.. ஓவியமா பாடலை சிலாகிக்கும் காலம் உள்ளவரை நெஞ்சில் நிறைந்திருப்பார் ஜெயராமன்..









