எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு.. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 500 பேர் மீது வழக்கு

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தியபோது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில்…

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தியபோது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். சென்னை சேப்பாக்கம் எம்எல்ஏ விடுதியில், எஸ்.பி. வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, விடுதிக்குள் அத்துமீறி நுழைய முயன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாக அதிமுக மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராம், முன்னாள் எம்பி வெங்கடேசன் உள்ளிட்ட 10 பேர் மீது திருவல்லிக்கேணி போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதேபோன்று, கோவையில் சுகுணாபுரம் பகுதியில் உள்ள எஸ்.பி. வேலுமணி வீட்டில் சோதனை நடைபெற்றபோது, அங்கு திரண்ட அதிமுகவினர், தடுப்புக்களை தூக்கி எறிந்து ரகளையில் ஈடுபட்டதுடன், சோதனையை கண்டித்து ஆர்ப்பாட்டதிலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், நோய்த்தொற்றை பரப்பும் வகையில் செயல்படுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், சட்டமன்ற அதிமுக உறுப்பினர்கள் 10 பேர் உள்பட 520 பேர் மீது குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.