வாலி திரைப்படத்தின் இந்தி உரிமையை போனி கபூருக்கு வழங்கியதற்கு எதிரான வழக்கில் நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே. சூர்யா, மாஸ்டர் கோர்ட் நீதிபதி முன்பு நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
தமிழ் திரைப்பட இயக்குநரும், பிரபல நடிகருமான எஸ்ஜே சூர்யா, அஜித், சிம்ரன்
நடிப்பில் வாலி என்ற படத்தை இயக்கினார். சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தின்
இந்தி உரிமையை போனி கபூர் பெற்றுள்ள நிலையில், அதை எதிர்த்து
எஸ்ஜே சூர்யா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் கதையானது, அதை எழுதியவருக்கே சொந்தம் என்பதற்கான எந்த ஆவணங்களையும் எஸ்ஜே சூர்யா வழங்கவில்லை என்றும் படத்தின் காப்புரிமை தயாரிப்பாளருக்கே சொந்தம் எனக் கூறி கடந்த 2021ல் உயர்நீதிமன்றம் போனிகபூர் இந்தி ரீமேக்கை துவங்க இடைக்கால அனுமதி வழங்கியது.
இதையடுத்து இந்த உத்தரவை எதிர்த்து எஸ்ஜே சூர்யா உச்சநீதிமன்றத்தில் கடந்த
மார்ச் மாதத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு
விசாரணை நீதிபதி எம்ஆர் ஷா முன்னிலையில் விசாரிக்கப்பட்டபோது, உயர்நீதிமன்ற
விசாரணையில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்றுக்கூறி எஸ்ஜே சூர்யாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதன் மூல வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும்
நிலையில், இன்று நடிகர் எஸ் ஜே சூர்யா நான்காவது மாஸ்டர் கோர்ட் நீதிபதி
கின்ஸ்லி கிரிஷ்டோபர் முன்பாக நேரில் ஆஜராகி, எதிர் தரப்பு மூத்த வழக்கறிஞர்
அப்துல்ஹமீது நடத்திய குறுக்கு விசாரணைக்கு சுமார் 2.30நேரம் சாட்சியளிதார்.
பின்னர், வழக்கில் குறுக்கு விசாரணை முடிவடையாததால் மீண்டும் குறுக்கு
விசாரணை செய்வதாக எதிர்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்ததையடுத்து நீதிபதி
திங்கட்கிழமை வழக்கை ஒத்திவைத்தார்.







