”யாரெல்லாம் சனாதனத்தை அழிக்க பார்க்கிறார்களோ அவர்கள் நாட்டை உடைக்க பார்க்கிறார்கள்” – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

நாம் கவனமாக இருக்க வேண்டும், யாரெல்லாம் சனாதனத்தை அழிக்க பார்க்கிறார்களோ, எதிராக பேசுகிறார்களோ அவர்கள் நாட்டை உடைக்க பார்க்கிறார்கள் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். சென்னை அண்ணாநகரில் உள்ள ஸ்ரீ பலிமர் மடத்தில்…

நாம் கவனமாக இருக்க வேண்டும், யாரெல்லாம் சனாதனத்தை அழிக்க பார்க்கிறார்களோ, எதிராக பேசுகிறார்களோ அவர்கள் நாட்டை உடைக்க பார்க்கிறார்கள் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

சென்னை அண்ணாநகரில் உள்ள ஸ்ரீ பலிமர் மடத்தில் சனாதன உற்சவம் இறுதி நாள் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று ஆன்மீக பணி, சமூக தொண்டாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினார்.

பின்னர் மேடையில் பேசிய போது ஆளுநர் ஆர்‌.என்.ரவி கூறியதாவது:

சென்னையில் உள்ள இந்த புனிதமான இடத்திற்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியாக
உள்ளது. நம் நாட்டில் புனிதமான இடங்கள்‌ ஏராளமாக உள்ளன. சனாதன உற்சவத்தை உலக நாடுகள் சேர்ந்து இரண்டு வாரம் முன்பு ஜி 20 மாநாடு என்ற வகையில் டெல்லியில் கொண்டாடியுள்ளது. அதாவது ‘வசுதேவ் குடும்பகம்’.. தமிழில்
சொன்னால் ‘யாதும் ஊரே’. என்று சொல்வோம்.

நாம் நாடு ‘பாரத்’. பாரத நாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. தனித்துவமானது. பல
அரசர்கள் ஆட்சி செய்து உள்ளார்கள். 200 ஆண்டுகள் ஆங்கிலேயேர் ஆட்சியின் கீழ்
இருந்துள்ளது. அரசியல் அமைப்பு சட்டத்தை எழுதிய அம்பேத்கர் அவர்கள் ‘இந்தியா என்பது பாரத்’ என்று குறிப்பிட்டுள்ளார். பாரத் தான் சனாதன தர்மத்தின் எடுத்துக்காட்டாக இருக்கிறது.

மரத்தின் அடி வேர் போல் இருப்பது சனாதனம். இலை இல்லாமல், கிளை இல்லாமல் மரம்
வாழ முடியும். ஆனால் வேர் இல்லாமல் மரம் வாழ முடியாது. இது போல் தான் சனாதனம்
என்பது நம்முடைய வேர் போன்றது. சனாதன தர்மம் தான் மிகவும் அடிப்படையானது. சனாதன தர்மத்தின் மிகவும் முக்கியமான பகுதியாக தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான இடங்கள் சனாதனம் தர்மத்தின் சான்றுகளாக
இருக்கின்றன.

சனாதனம் தர்மம் அனைத்திற்கும் அடிப்படையானது, உலகத்திற்கு தேவையானது. இன்று
சிலர் சுய நலத்திற்காக சனாதன தர்மத்தை திரித்து கூறுகிறார்கள்; ஆனால் சனாதனம்
அழியாது. தற்போது நாம் கவனமாக இருக்க வேண்டும்.யாரெல்லாம் சனாதனத்தை அழிக்க பார்க்கிறார்களோ, எதிராக பேசுகிறார்களே அவர்கள் நாட்டை உடைக்க பார்க்கிறார்கள்.

நாட்டின் அடிப்படை தத்துவம் சனாதனம். அடிப்படையை உடைத்தால் தான் நம்மை
பிளவுபடுத்த முடியும் என்று ஆங்கிலேயர்கள் நினைத்தார்கள். அதன்படி, நம்
அடிப்படையை ஆங்கிலேயர் உடைத்தார்கள். நாடு பிளவு கண்டது. தற்போது சனாதனம் என்னும் அடிப்படையை உடைக்க முயல்வது, நாட்டை பிளவுபடுத்தும் முயற்சிப்பதாகும். இன்னொரு பிரிவினையை ஏற்க முடியாது.

இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.