கீழ்கோத்தகிரி வனச்சரகத்திற்குட்பட்ட தேயிலை தோட்டம் பகுதியில் உள்ள பாறையின் இடுக்கில் சிக்கிக்கொண்ட கரடி நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்க்கப்பட்டு தாய் கரடியுடன் வனத்துறையினரால் சேர்க்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கீழ் கோத்தகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட கடக்கோடு மட்டம் பகுதியில் கரடி தாய் மற்றும் குட்டிகளுடன் தேயிலை தோட்டத்தில் உலா வந்தது. அப்போது திடீரென அங்குள்ள ஒரு பாறை இடுக்கில் குட்டி கரடி சிக்கிக்கொண்டது. இதனை கண்டு நீண்ட நேரம் கூச்சலிட்டு தாய் கரடி காப்பாற்ற துடித்தது. பின்னர் கரடியின் சத்தத்தை கேட்ட அப்பகுதி கிராம மக்கள் அங்கு வந்து தாய் கரடியை வனப்பகுதிக்குள் விரட்டி குட்டி கரடியை மீட்க உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பெயரில் உடனே கீழ் கோத்தகிரி வனச்சரகர் ராம் பிரகாஷ் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாறை இடுக்கில் சிக்கித்தவித்த கரடி குட்டியை மீட்க பெரிய பாறை கற்களை அகற்றி குட்டியை மீட்டு தாய் கரடியுடன் சேர்த்து வனப்பகுதியில் விரட்டினர். இந்த வீடியோ தற்போது சமூக வளைத்தளங்களில் வைரலாகி வனத்துறைக்க பராட்டு குவிந்து வருகிறது.
—அனகா காளமேகன்







