கரடி நடமாட்டம் இருப்பது கண்காணிப்பு கோமிராவில் பதிவாகி இருந்த நிலையில் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. மேலும் அவ்வப்போது அடிவாரப் பகுதிகளுக்கு இவை கீழே இரங்கிவருவது வழக்கமாகி வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவில் தெற்கு பாப்பான் குளம் மற்றும் அங்குள்ள கோவில் வளாக பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பது கண்காணிப்பு கோமிராவில் பதிவாகி இருந்தது. ஓரிரு நாட்கள் முன்பு தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் மூன்று நபர்களை கரடி கடித்து குதறியது.
இதையடுத்து கரடியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்த நிலையில் அக்கரடி உயிரிழந்தது. இது குறித்து வனத்துறையினர் இருந்து கரடி தொற்று காரணமாகவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
அதே போல தற்போது தெற்கு பாப்பான் குளம் பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். கரடியை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் செண்பக பிரியா உத்தரவின் பேரில் அம்பாசமுத்திரம் வனச்சரக வேட்டை தடுப்பு காவலர்கள் இரு குழுக்களாக அமைக்கப்பட்டு விடிய விடிய தீ பந்தம் ஏற்றி கரடியை விரட்டும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் நிலையிலும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளதால் அப்பகுதி பரப்பரப்பாக காணப்படுகிறது.







