10% இடஒதுக்கீடு தொடர்பான தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி ஆதரவு தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, அசன் மெளலானா ஆகியோர் கலந்துகொண்டனர். பாஜக, அதிமுக, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆதரவு தெரிவித்துள்ளது. கூட்டத்தில் பேசிய செல்வப்பெருந்தகை, “சமூக நீதியை நிலைநாட்ட தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கிறது” என்று குறிப்பிட்டார். தேசிய அளவில் 10% இட ஒதுக்கீட்டிற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிக்கும் நிலையில், தமிழ்நாட்டில் வேறு முடிவை எடுத்துள்ளது முக்கியமாக பார்க்கப்படுகிறது.







