கை, கால்களை இழந்த நிலையிலும், விடாமுயற்சியால் யுபிஎஸ்சி தேர்வில் வென்ற 27 வயது இளைஞர்!

ரயில் விபத்து ஒன்றில் இரு கால்களையும், ஒரு கையையும் இழந்தாலும், மனம் தளராமல், விடாமுயற்சியால் போராடி யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுராஜ் திவாரி. ஐஏஎஸ்., ஐபிஎஸ்., ஐஎப்எஸ். உள்ளிட்ட…

ரயில் விபத்து ஒன்றில் இரு கால்களையும், ஒரு கையையும் இழந்தாலும், மனம் தளராமல், விடாமுயற்சியால் போராடி யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுராஜ் திவாரி.

ஐஏஎஸ்., ஐபிஎஸ்., ஐஎப்எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வை, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த தேர்வு 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. கடந்தாண்டு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் யுபிஎஸ்சி இணையதளத்தில் கடந்த 23ஆம் தேதி வெளியாகின. இதில் 613 ஆண்கள், 320 பெண்கள் என மொத்தம் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 3 ஐஏஎஸ் அதிகாரிகளின் வாரிசுகள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல் கடலூர் அருகே ஒரே வீட்டில் இருந்து இரண்டு சகோதரிகள் யுபிஎஸ்சி தேர்வில் வென்று சாதனை படைத்துள்ளனர். இதுதவிர கிருஷ்ணகிரியில் பேருந்து வசதியே இல்லாத கிருஷ்ணகிரி மாவட்டம் கருங்காலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த மாணவி ஹரிணி, சிவில் சர்வீஸ் தேர்வில் தேசிய அளவில் 289-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். மேலும் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவரான நெல்லை அம்பாசமுத்திரத்தை சேர்ந்த சுபாஷ் கார்த்திக் யுபிஎஸ்சி தேர்வில் முதல் முயற்சியிலேயே மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலம், மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்த சுராஜ் திவாரி என்ற 27 வயதான இளைஞர் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று 917-வது இடத்தை பிடித்துள்ளார். மெயின்பூர் மாவட்டத்தின், கஸ்வா குரவ்லி பகுதியில் வசிக்கும் சுராஜ் திவாரிக்கு இரண்டு கால்களும், ஒரு கையும் கிடையாது. மற்றொரு கையில் மூன்று விரல்கள் இல்லை. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு ரயில் விபத்தில் தான் இவை அனைத்தையும் இழந்தார். முழுக்க முழுக்க குடும்பத்தினரையே சார்ந்திருக்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்ட போது, அவரது சகோதரரும் இறந்து போனார். இதனால் சுராஜ் திவாரியின் குடும்பத்தின் வறுமை நிலைக்கு சென்றது. குடும்ப வறுமையை டெய்லரான சுராஜின் தந்தையால் சமாளிக்க முடியவில்லை.

இருந்தும் மனம் தளராத சுராஜ் திவாரி அவ்வளவு நிதி நெருக்கடியான சூழலிலும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ரஷ்ய இலக்கியத்தில் இளநிலை முடித்து அங்கேயே முதுநிலை படிப்பிலும் சேர்ந்தார். அப்போது யுபிஎஸ்சி தேர்வை எழுத முடிவு செய்த சுராஜ் பணம் கட்டி படிக்க போதிய வசதி இல்லாததால், எந்தவொரு கோச்சிங் சென்டருக்கும் போகாமல், யாருடைய உதவியும் இல்லாமல், இணையத்தின் உதவியுடன் படித்து, 2022ஆம் ஆண்டு நடத்தப்பட்ட யுபிஎஸ்சி தேர்வை எழுதினார். அவரின் விடாமுயற்சிக்குப் பரிசாய் அண்மையில் வெளியான 2022ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வு முடிவில், 917ஆவது இடத்தைப் பிடித்து தேர்ச்சி பெற்றுளளர் சுராஜ் திவாரி.

மகன் சுராஜ் திவாரியின் வெற்றி குறித்து பேசிய அவரின் தந்தை ரமேஷ் குமார் திவாரி , என் மகனின் கை கால்களை பறித்த அந்த விபத்துக்குப் பிறகு எங்கள் குடும்பத்துக்கு எதிர்காலமே இனி இல்லை என்று நினைத்தேன். இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். என்னுடைய மகன் என்னைப் பெருமை படுத்தி இருக்கிறான். அப்போதே சுராஜ் என்னிடம், “என் கையில் மூன்று விரல்கள் இருக்கிறது. உங்களை நான் கைவிட மாட்டேன்” என கூறினான். தற்போது அவன் வெற்றிபெற அந்த 3 விரல்களே போதுமானதாக இருந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார். தற்போது சுராஜின் வெற்றியை அவரது குடும்பம் மட்டுமின்றி அவரது ஊரே கொண்டாடி வருகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.