ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் விழுந்ததில் நிலவில் 10 மீட்டருக்கு பள்ளம் – நாசா தகவல்..!

ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் விழுந்து 10 மீட்டர் விட்டத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த…

ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் விழுந்து 10 மீட்டர் விட்டத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த மாதம் 10-ம் தேதி ரஷ்யா விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தை நாளை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க திட்டமிட்டு இருந்தது. கடந்த 17-ம் தேதி நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் ரஷ்ய விண்கலம் வெற்றிகரமாக நுழைந்தது. தொடர்ந்து படிப்படியாக சுற்றுப்பாதையை குறைக்கும் பணிகள் நடந்து வந்தன.

ஆனால், திட்டமிட்டபடி நிலவில் இந்த விண்கலத்தை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. திடீரென விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறுதிக்கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ராஸ்கோஸ்மோஸ் தெரிவித்தது. இதனால், நிலவின் சுற்றுப்பாதையிலேயே லூனா – 25 விண்கலம் சுற்றி வந்தது.

இதனிடையே, தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் முயற்சியில் ரஷ்ய விண்வெளி நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டது. இதனைதொடர்ந்து, கடந்த மாதம் 19-ம் தேதி ரஷ்ய விண்வெளி நிறுவனம் ராஸ்கோஸ்மோஸ் வெளியிட்ட அறிக்கையில், லூனா 25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியதாக தெரிவித்தது.

இந்த லூனா-25 விண்கலம் விழுந்த இடத்தை, நிலவை கண்காணித்து வரும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் ஆர்பிட்டர் படம் பிடித்துள்ளது. லூனா -25 விண்கலம் தரையிறங்க வேண்டிய இடத்துக்கு அருகில் புதிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால், இது லூனா-25 விண்கலம் விழுந்த இடமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த புதிய பள்ளம், 10 மீட்டர் அகலத்தில் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.