2023ல் 99பத்திரிகையாளர்கள் பலி – பாலஸ்தீனத்தில் மட்டும் 74பத்திரிகையாளர்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்!

2023ம் ஆண்டில் மட்டும் 99பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பாலஸ்தீனத்தில் மட்டும் 74பத்திரிகையாளர்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கும்,  ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த வருடம் அக்டோபர் 7-ம் தேதி போர் தொடங்கியது.  தொடர்ந்து இரு…

2023ம் ஆண்டில் மட்டும் 99பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பாலஸ்தீனத்தில் மட்டும் 74பத்திரிகையாளர்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலுக்கும்,  ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த வருடம் அக்டோபர் 7-ம் தேதி போர் தொடங்கியது.  தொடர்ந்து இரு தரப்பினரும் தாக்குதல்களை தொடங்கினர்.  இதில் ஏராளமான ராணுவ வீரர்களும்,  பொதுமக்களும் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  28,663-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை சுமார்  68,395 பேர் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசாவில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் என இஸ்ரேல் இதனை பிரகடனப்படுத்தினாலும், இதில் பெரும்பாலும் உயிரிழந்து வருவது சாமானிய பொதுமக்கள் என்பது அதிர்ச்சியூட்டும் உண்மையாகும். அதேபோல இந்த போரில் ஏராளமான பத்திரிகையாளர்களும் உயிரிழந்துள்ளனர். 

இந்த போர் துவங்கியதில் இருந்தே ஏராளமான செய்தியாளர்கள் களத்தில் இருந்து போர் தொடர்பான செய்திகளை எடுத்துக் கூறி வருகின்றனர். அந்த வகையில் காசா பகுதியை சேர்ந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் வாயில் அல் தஹ்துத், துவக்கம் முதலே போர் தொடர்பான தகவல்களை தான் பணியாற்றும் தொலைக்காட்சிக்கு வழங்கி வருகிறார். இந்தப் போரில் தஹ்துத்தின் மனைவி, இரண்டு குழந்தைகள் உட்பட அவரது உறவினர்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும், களத்தில் இருந்து செய்திகளை வெளியிடுவதில் இருந்து பின் வாங்காமல் தஹ்துத் தொடர்ந்து பணியாற்றி வந்தார்.

 கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த ஏவுகணை தாக்குதலின் போது இவருடன் பணியாற்றிவந்த ஒளிப்பதிவாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே அவரிடம் இருந்து கீழே விழுந்த கேமராவை எடுத்து, அந்த சம்பவத்தை தஹ்துத் பதிவு செய்தார். இதில் அவர் படுகாயம் அடைந்ததை அடுத்து தற்போது கத்தாரில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதன்பிறகும் மீண்டும் போரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிக்கு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதேபோல பாலஸ்தீனத்தில் களத்தில் இருந்து செய்திகளை வெளியிட்ட பத்திரிகையாளர்கள் கிட்டத்தட்ட 74பேர் அதிகாரப்பூர்வமாக கொல்லப்பட்டுள்ளதாக பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு (CPJ) வெளியிட்டுள்ளது. மேலும் கடந்த 2023ம் ஆண்டில் மட்டும் உலக அளவில் 99 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அதில் பாலஸ்தீனத்தில் மட்டும் 74பேர் எனவும் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இது பல மடங்கு அதிகம் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

20 ஆண்டுகள் நடைபெற்ற வியட்நாம் போரில் 63 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். அதேபோல 7 ஆண்டுகள் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில்  67 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்.  இந்த நிலையில் கடந்த 4மாதங்களில் மட்டும்  பாலஸ்தீனத்தில் 74 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.