சீன பெருவெள்ளத்தில் தப்பியோடிய 900 பாம்புகள் : அச்சமூட்டும் காணொளிகள் – மக்கள் பீதி…!

சீனாவில் பெருவெள்ள பாதிப்புகளுக்கு இடையே பண்ணைகளில் இருந்து 900 பாம்புகள் தப்பியோடியுள்ளன.

சீனாவில் புயல் மற்றும் தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் மீட்புபணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சீனாவின் குவாங்சி பிராந்தியத்தில் உள்ள பாம்பு பண்ணைகள் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த பண்ணையில் இருந்து சுமார் 900 பாம்புகள் தப்பி ஓடியுள்ளன.

உள்ளூர் செய்தி நிறுவனங்களின் தகவலின் படி, குவாங்சியில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, பாம்பு வளர்ப்புப் பண்ணைகளிலிருந்து நூற்றுக்கணக்கான பாம்புகள் தப்பிச் சென்றுள்ளன. குளோபல் டைம்ஸ் மற்றும் பிற சீன ஊடகங்களின் அறிக்கைகளின்படி, குறைந்தது 900 பாம்புகள் கட்டுப்பாடின்றி சுற்றித் திரிகின்றன.

இது தொடர்பாக இணையத்தில் வெளிவந்துள்ள காணொளிகள், வெள்ள நீரில் பாம்புகள் நீந்துவதும் வேகமாகத் தப்பிச்செல்லும் அந்தப் பாம்புகளைப் பிடிப்பதற்காக, மக்கள் தொடை அளவு தண்ணீரில் நடந்து செல்வதையும் காட்டுகின்றன.

பண்ணைகளில் இருந்து தப்பித்த பாம்புகளில் விஷமுள்ள இனங்களும் உள்ளன. தப்பித்த பாம்புகளைப் பிடிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடிபட்டவர்களுக்கு விரைவான சிகிச்சையை உறுதி செய்வதற்காக அதிகாரிகள் தற்காலிக மருத்துவ நிலையங்களை அமைத்துள்ளனர். மேலும் பாம்புகளை வெறும் கைகளில் பிடிக்க கூடாது என்றும் அரசு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.