9 முறை தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் ஶ்ரீகர் பிரசாத் பிறந்த தினம்
இன்று. அவரின் சினிமா பயணம் குறித்து தற்போது பார்க்கலாம்.
பொழுதுபோக்காக மட்டுமே பார்க்கப்பட்ட சினிமா தற்போது ஒரு முக்கியமான காட்சி
ஊடகமாக மாறியுள்ளது. அப்படிப்பட்ட சக்திவாய்ந்த சினிமாவை உருவாக்க தினமும் பல
ஆயிரம் பேர் உழைக்கின்றனர். அவர்களில் முக்கியமானவர்கள் படத்தொகுப்பாளர்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒரு திரைப்படம் இப்படி தான் உருவாக வேண்டும் என்பதை இயக்குனர் முடிவு
செய்தாலும் அதை நிஜத்தில் உருவாக்கி கொடுப்பது படத்தொகுப்பாளர்கள் மட்டுமே.
அப்படி இந்திய சினிமாவின் முக்கியமான படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக திகழ்ந்து
வருபவர் ஸ்ரீகர் பிரசாத்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடா என ஏராளமான மொழி படங்களுக்கு
படத்தொகுப்பு செய்து வரும் ஶ்ரீகர் பிரசாத் 1986-ம் ஆண்டு இந்தியில் வெளியான
ஸ்வாதி திரைப்படம் மூலமாக திரைத்துறையில் படத்தொகுப்பாளராக அறிமுகமானார்.
அவரது திறமையும், சினிமாவின் மீது அவர் வைத்திருந்த அன்பும் அடுத்த 4
ஆண்டுகளிலேயே முதல் தேசிய விருதை அவருக்கு பெற்றுத்தந்தது.
பொன்னியின் செல்வன் உட்பட நூற்றுக்கணக்கான படங்களுக்கு படத்தொகுப்பு செய்த
ஶ்ரீகர் பிரசாத் 9 தேசிய விருதுகளையும் பல்வேறு மாநில விருதுகளையும் பெற்று
சினிமா திரைக்கு பெருமை தேடி தந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் லிம்கா புக் ஆஃப்
ரெக்கார்ட்ஸில் அதிகமான மொழிகளில் படத்தொகுப்பாளராக பணியாற்றியவர் என்ற
சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதுவரை 17 மொழி படங்களுக்கு அவர் எடிட்டிங்
செய்துள்ளார். சினிமா என்னும் ஊடகம் மூலமாக மக்களை ஒரு புது உலகத்திற்குள் கொண்டு செல்லும் ஶ்ரீகர் பிரசாத் மேலும் பல்வேறு சாதனைகளை படைக்க நாமும் வாழ்த்துவோம்.
தினேஷ் உதய், நியூஸ் 7 தமிழ்