உசிலம்பட்டி அருகே 80 அடி கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்புத்துறையினர் போராடி மீட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உச்சப்பட்டியைச் சேர்ந்தவர் தெய்வநாதன். விவசாயியான இவர் தனது தோட்டத்தில் அவரது பசு மாட்டை கட்டி வைத்துவிட்டு இரவு தூங்க சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இரவு 2 மணியளவில் கிணற்றில் மாடு தவறி கீழே விழுந்த சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த தெய்வநாதன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உசிலம்பட்டி தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் தங்கம் தலைமையிலான தீயணைப்புத்துறை வீரர்கள், இரவென்றும் பாராமல் 80 அடி கிணற்றில் இறங்கி சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி மின்விளக்குகள் மற்றும் கயிறு மூலம் பசு மாட்டை உயிருடன் பத்திரமாக மீட்டு உரிமையாளரான தெய்வநாதனிடம் ஒப்படைத்தனர்.
இரவென்றும் பாராது விரைந்து வந்து பசு மாட்டை உயிருடன் பத்திரமாக மீட்டு கொடுத்த தீயணைப்புத்துறை வீரர்களுக்கு கிராம மக்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.







