தினமும் 3 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்: குறுந்தகவலை நம்பி ரூ. 8 லட்சத்தை இழந்த ஊழியர்

கிருஷ்ணகிரி அருகே தினமும் ரூ. 3,000 சம்பாதிக்கலாம் என செல்போனில் வந்த குறுந்தகவலை நம்பி 8 லட்சத்து 6,460 ரூபாயை தனியார் நிறுவன ஊழியர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் சைபர் கிரைம்…

கிருஷ்ணகிரி அருகே தினமும் ரூ. 3,000 சம்பாதிக்கலாம் என செல்போனில் வந்த குறுந்தகவலை நம்பி 8 லட்சத்து 6,460 ரூபாயை தனியார் நிறுவன ஊழியர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள தற்போதைய சூழலில் நிதி மோசடிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தற்போது தமிழகத்திலும் குறுந்தகவல் மூலமாகவும், இணைய வழியாகவும் பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம். வீட்டில் இருந்தபடியே ஒரு மணி நேரம் வேலை செய்தால் போதும், பங்குச் சந்தையில் 1 லட்சம் முதலீடு செய்தால் தினமும் ரூ. 1,000 முதல் ரூ. 5,000 வரை சம்பாதிக்கலாம் போன்ற குறுந்தகவல்களை நம்பி ஏராளமான பொதுமக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கிருஷ்ணகிரியில் தினமும் ரூ. 3,000 சம்பாதிக்கலாம் என செல்போனில் வந்த குறுந்தகவலை நம்பி 8 லட்சத்து 6,460 ரூபாயை தனியார் நிறுவன ஊழியர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் சிவசந்திரன். இவருக்கு வீட்டில் இருந்து பகுதி நேர வேலை செய்து தினமும் 3,000 ரூபாய் சம்பாதிக்கலாம் என செல்போனில் குறுந்தகவல் வந்துள்ளது. இந்த குறுந்தகவலை நம்பிய சிவசந்திரன் வாட்ஸ் ஆப் மூலம் 8 லட்சத்து 6,460 ரூபாயை முதலீடு செய்துள்ளார்

பின்னர், அந்த வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொள்ள முடியாததால் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.