இன்ஃபோசிஸ், டிசிஎஸ், விப்ரோ, காக்னிசன்ட் உள்ளிட்ட 8 நிறுவனங்களின் கிரீன் கார்டு விண்ணப்ப நடைமுறைகளுக்குத் தடை விதித்து அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்காவில் ஹெச்-1பி (H-1B) விசாவில் பணிபுரியும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குக் கிரீன் கார்டு பெற நிறுவனங்கள் விண்ணப்பிக்க உதவும் நிரந்தரத் தொழிலாளர் சான்றிதழ் திட்டத்தில் (PERM) இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று (அக். 8) இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. காக்னிசன்ட், இன்ஃபோசிஸ், டாடா, விப்ரோ, ஹெச்சிஎல், கேப்ஜெமினி, மைக்ரோசாப்ட் மற்றும் அடோப் ஆகிய நிறுவனங்கள் இந்தத் தடைக்கு உள்ளாகியுள்ளன. அமெரிக்க தொழிலாளர் துறைச் செயலர் கீத் சோண்டர்லிங் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அப்போது, அமெரிக்கத் துணை அதிபரும், மோசடி தடுப்புப் பணிக்குழுவின் தலைவருமான ஜே.டி. வான்ஸ் உடனிருந்தார்.
இதுகுறித்து கீத் சோண்டர்லிங் கூறுகையில், உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் சிலவான காக்னிசன்ட், இன்ஃபோசிஸ், டாடா, விப்ரோ, ஹெச்சிஎல் மற்றும் கேப்ஜெமினி ஆகியவற்றை நிரந்தரத் தொழிலாளர் சான்றிதழ் திட்டத்திலிருந்து இடைநீக்கம் செய்வதாகத் தெரிவித்தார். மேலும், மைக்ரோசாப்ட் மற்றும் அடோப் நிறுவனங்களும் இந்தத் திட்டத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக அவர் கூறினார்.
இந்த நிறுவனங்கள் தொடர்பான புதிய நிரந்தரத் தொழிலாளர் சான்றிதழ் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், ஏற்கெனவே நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் மீதான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009-ம் ஆண்டு முதல் இந்த நிறுவனங்கள் மட்டும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்காகச் சுமார் 30 லட்சம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளன. அவற்றுக்கு 2.30 லட்சத்துக்கும் அதிகமான ஹெச்-1பி விசா ஒப்புதல்களும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான நிரந்தரத் தொழிலாளர் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன என்று சோண்டர்லிங் தெரிவித்தார். இதன் மூலம், அமெரிக்கத் தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.




