இந்திய நாட்டின் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்படும் இத்தருணத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது சுதந்திர தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், விடுதலை போர்க்கால விழுமியங்களையும், அதன் மகத்தான போராட்ட நினைவுகளையும் கட்சி உயர்வாகப் போற்றி மதிக்கிறது, நினைவு கூர்கிறது. உலகில் வேறெங்கும் நடைபெறாத, விடுதலை போராட்ட முறை, ஆயுத போராட்டம், அகிம்சை முறை போராட்டம் என இந்தியாவில் தான் நடந்தேறியது. ஒன்றின் குறியீடு மகாத்மா காந்தி என்றால் பிறிதொன்றின் குறியீடு பகத் சிங், சுபாஷ்சந்திர போஸ், கதர் இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கம் எனத் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், சுதந்திர இந்தியாவில் டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான அரசியல் நிர்ணய சபை இந்தியாவிற்கான திசை வழியைக் காட்டியது எனத் தெரிவித்துள்ள அவர், முதல் பிரதமர் நேரு, நவீன இந்தியாவிற்கான அடித்தளங்களுக்குத் திட்டமிட்டார். ஐந்தாண்டு திட்டமுறை, விண்வெளி ஆய்வு, அறிவியல் ஆராய்ச்சி, நாடு முன்னேற்றங்களைத் துவக்கியது. நமது அறிஞர்கள், வல்லுநர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைவரின் கடும் உழைப்பால், சிந்தனையால் நாடு முன்னேற்றங்களை எட்டுகிறது எனக் குறிப்பிட்டுள்ள அவர்,
எனினும், மறுபுறம், இந்தியாவின் மிகச் சிறந்த பன்முகமும், மதச்சார்பின்மையும் நெருக்கடிக்குள்ளாகி விட்டது. அரசியல் சாசனம் மீறப்படுகிறது. நாடாளுமன்ற ஜனநாயகம் கூச்சல் குழப்பங்களால், கை உயர்த்தும், குரல் வாக்கெடுப்புகளால் மதிப்பிழக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றிய பொதுத்துறை திட்டமிட்டு அடித்து நொறுக்கப்படுகிறது. தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகள் பறிக்கப்படுகிறது. தலித், பழங்குடிகள், சிறுபான்மையினர் மீதான அச்சசூழல் நீடிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மதநல்லிணக்கம், ஒற்றுமை உணர்வுகளைச் சிதைக்கும் கருத்துக்கள் தூண்டப்படுகிறது. கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ள அவர், நாடு கடந்த பெரும் நிறுவனங்களின் மூலதன படையெடுப்பு தொடர்கிறது. நமது தற்சார்பு அழிகிறது. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் முற்றிலும் அழியத் துவங்கி விட்டது. வறுமை, வேலையின்மை அதிகரித்து, வாழ்வுரிமைக்காகப் புலம் பெயர்வோர் எண்ணிக்கை கூடுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்குமான இடைவெளி அதிகரித்த வண்ணமுள்ளது எனத் தெரிவித்துள்ள அவர், ஒன்றியத்தில் அதிகாரம் குவிக்கப்படுகிறது, மாநிலங்களுக்கான அதிகார பரவலையும் – கூட்டிசைவையும் ஒன்றிய அரசு அலட்சியப்படுத்துகிறது. இத்தருணத்தில், முன் எப்போதுமில்லாத வகையில் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை உயர்த்தி பிடிப்போம். பன்முகம், மதச்சார்பின்மை, அரசியல் சாசனம் பாதுகாப்போம். விடுதலை போர்க்கால விழுமியங்களை உயர்த்திப் பிடிப்போம் எனக் கூறியுள்ள அவர், அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாம் அனைவரும் இந்தியர் என்கிற உணர்வை உள்ளத்தில் ஏந்தி, தேசியக் கொடியை அவரவர் இல்லத்தில் ஏற்றிவைத்து தேசத்தின்மீது நாம் கொண்டுள்ள பற்றுறுதியை வெளிப்படுத்தி வருகிறோம் எனக் கூறியுள்ளார். மேலும், சுதந்திரப் திருநாள் அமுதப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த வேளையில், தேசத்தின் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள ஒவ்வொருவரும் முன்வர வேண்டும், அனைவருக்கும் சுதந்திர திருநாள் நல்வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.