75வது சுதந்திர தினவிழாக் கொண்டாட்டத்தையொட்டி இந்திய தலைநகர் டெல்லி பல அடுக்கு பாதுகாப்பில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
75-வது சுதந்திர தினவிழா
டெல்லி செங்கோட்டையில் நாளை நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்ற உள்ளார். சுமார் 7 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ள இவ்விழாவையொட்டி, செங்கோட்டையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டின் 75-வது சுதந்திர தினம் அமுதப் பெருவிழாவாக நாடு முழுவதும் கொண்டாடப்படும் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இவ்விழாவை சிறப்பாகக் கொண்டாடுமாறு மாநில அரசுகளையும், மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அனைவரும் சமூக ஊடக முகப்பு படங்களில் தேசியக் கொடியைப் பதிவேற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதன்படி, பல்வேறு தரப்பினரும் சமூக ஊடக முகப்பில் தேசியக் கொடியை பதிவேற்றம் செய்துள்ளனர்.
மேலும், ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை வீடுகளில் தேசியக் கொடியைப் பறக்க விடுமாறும் நாட்டு மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். இதற்காக, தேசியக் கொடியை பறக்கவிடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில திருத்தங்களை செய்தது.
பாதுகாப்பு வளையத்தில் டெல்லி
டெல்லி செங்கோட்டையில் நாளை நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றி வைத்து, உரையாற்றயுள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், முப்படைத் தளபதிகள் மற்றும் உயரதிகாரிகள் உட்பட சுமார் 7 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டை முழுவதும் டெல்லி போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். செங்கோட்டையைச் சுற்றி 5 கி.மீ. சுற்றளவுக்கு வான் பகுதியில் பட்டம், ட்ரோன் போன்றவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்காணிப்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், டிஆர்டிஓ மற்றும் இதர பாதுகாப்பு அமைப்புகளின் உதவியுடன் ட்ரோன் ஜாமர் (Drone Jammer) சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல் துறை உயரதிகாரி ஒருவர் கூறும்போது, செங்கோட்டையின் சுற்றுப்புறப் பகுதிக்குள் வருவோரைக் கண்காணிக்க நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. உணவு, தண்ணீர் பாட்டில், ரிமோட் கன்ட்ரோல் கார் சாவிகள், சிகரெட் லைட்டர்கள், சிறிய பெட்டிகள், கைப்பைகள், கேமராக்கள், பைனாகுலர்கள், குடைகள் உள்ளிட்டவற்றைக் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.








