சிவகங்கை மாவட்டத்தில் 7 ஆம் கட்ட அகழாய்வு கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஒரே குழியில் 7 மனித எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன.
தொல்லியல் துறையின் 7 ஆம் கட்ட அகழாய்வு கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் கடந்த 2021 பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது.

கொந்தகை அகழாய்வு பணிகளில் முதுமக்கள் தாழிகளும் எலும்புக்கூடுகளும் கிடைத்து வருகின்றன. சங்க காலத்திற்கு முற்பட்ட ஈமக் காடு என்பதால் கீழடி அகழாய்வில் கொந்தகை முக்கிய இடம் வகிக்கிறது.
கொந்தகை அகழாய்வு பணிகளில் 5 க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டது. இதில் இதுவரை 10 க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. 2 முதுமக்கள் தாழிகளில் இருந்த மனித எலும்புக்கூடுகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மூலம் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கடந்த சில நாள்களாக நடைபெற்று வரும் ஆய்வுப் பணிகளில் ஒரே குழியில் சமதள நிலையில் 7 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு (Carbon dating) ஆய்வுக்கு பின்னரே மனித எலும்புக் கூடுகளின் காலம் துல்லியமாக கணிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.







