இன்று ஒரே நாளில் 7.75 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட விருகம்பாக்கம் நகர்புற ஆரம்பசுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட பல இடங்களில் 50000 சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் இன்று நடைபெற்றது. இதுவரை 37 மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில் 5 கோடியே 43 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளதாக தெரிவித்தார்.
12-14 வயதுடைய 93.89 சதவீதம் முதல் தவணை தடுப்பூசியும், 75.08 சதவீதம் பேருக்கு 2ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 15 முதல் 17 வயதுடையவர்களுக்கு 91.29 சதவீதம் முதல் தவணையும், 77.76 சதவீதம் 2ம் தவணையும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இதுவரை 96.59 சதவீதம் பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசியும், 91.61 சதவீதம் பேர் 2ம் தவணையும் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இன்று ஒரே நாளில் 7.75 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.








