தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே காதிகூட மண்டலம் பிப்பிறி என்ற இடத்தில் விவசாயிகள் நேற்று தங்களது நிலங்களில் மக்காச்சோளம் விதைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென இடி மின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது. இதனால் வயலில் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் அருகில் இருந்த குடிசை அருகே மழைக்காக ஒதுங்கியுள்ளனர்.
அப்போது மின்னல் தாக்கி 3 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் இதே மாவட்டத்தில் வேலமண்டலத்தில் மின்னல் தாக்கி 2 பெண் விவசாயிகளும், சாங்கிடி என்ற இடத்தில் ஒரு ஒரு பெண்ணும், சோன்காஸ் என்ற பகுதியில் சுனிதா என்பவரும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
மேலும் 8 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆதிலாபாத் மாவட்டத்தில் ஒரே நாளில் மின்னல் தாக்கி 6 விவசாயிகள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.








