தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 542 பேருக்கு புதிதாக கொரோனா தொற்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைய தொடங்கியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது. இருப்பினும் மக்கள் பொது இடங்களில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா குறையத்தொடங்கியுள்ளது. கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது மக்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் மேலும் 542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 65 ஆயிரத்து 562 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 675 ஆக உள்ளது. இதுவரை 35 லட்சத்து 22 ஆயிரத்து 032 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகம் முழுவதும் 5,496 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.







