டெல்லியில் இன்று ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்கிறார்.
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 50-வது கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்கவுள்ளார். முன்னதாக, டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்தித்த அவர், தமிழ்நாடு சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தார்.
ஜிஎஸ்டி சட்டம் அமல்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஜிஎஸ்டி குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலின் 50-ஆவது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறவுள்ள அந்தக் கூட்டத்தில், மாநில நிதியமைச்சர்கள், மத்திய நிதியமைச்சக உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
ஆன்லைன் விளையாட்டுகள், குதிரைப் பந்தயம் உள்ளிட்ட விளையாட்டிற்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்க மாநில நிதியமைச்சர்களைக் கொண்ட குழு பெரும்பான்மையாக பரிந்துரை வழங்கியது. இது குறித்து ஜிஎஸ்டி கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் விநியோகிக்கப்படும் உணவுகளுக்கான சரக்கு-சேவை வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பது, புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கான இறக்குமதி , மருந்துகளுக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்களிப்பது உள்ளிட்டவை தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு நிதியமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்ற பின்னர் பங்கேற்கு ம் முதல் ஜிஎஸ்டி கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.







