நடந்து முடிந்த 5 மாநில தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் தோல்வியில் இருந்து மீண்டு வர காங்கிரஸ் கட்சி தன்னை விரைவாக மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்ற கருத்து அரசியல் பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.
403 தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேச தேர்தலில் 4 முனைப்போட்டி நடைபெற்றது. இதில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அப்னாதளம், நிசாத் ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டன. இதனையடுத்து இன்று வெளியான தேர்தல் முடிவுகளில் பாஜக கூட்டணி 264 தொகுதிகளிலும், சமாஜ்வாதி கட்சி 134 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 1 தொகுதியிலும், காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும், மற்றவை 2 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. உத்தரபிரதேசத்தில் தனித்து ஆட்சி அமைக்க 202 இடங்கள் பெரும்பான்மை பலம் தேவை என்ற நிலையில் 263 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கிறது. 37 ஆண்டுகால உ.பி அரசியலில் தொடர்ந்து இரண்டாவது முறை முதல்வர் நாற்காலியில் அமரும் வாய்ப்பை யோகி ஆதித்யநாத் பெறப் போகிறார் என்பது குறிப்பிடதக்கது.
117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியில் வலிமையாக இருந்த காங்கிரஸ் கட்சி, கோஷ்டி பூசல் காரணமாக ஆட்சியை பறிகொடுக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 91 தொகுதிகளில் முன்னிலை பெற்று ஆட்சியமைக்கவுள்ளது. காங்கிரஸ் கட்சி கட்சி 19 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. அகாலிதளம் தலைமையிலான கூட்டணி 3 இடங்களிலும், பா.ஜனதா கூட்டணி 2 இடங்களிலும் மற்றவை 2 முன்னிலை பெற்றுள்ளது.
70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. பா.ஜ.க. 42 இடங்களில் முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. காங்கிரஸ் 24 இடங்களிலும் மற்றவை 4 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
40 தொகுதிகளைக் கொண்ட கோவா மாநிலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் 17, பா.ஜ.க. 13 இடங்களில் வெற்றி பெற்றது. மத்தியில் அதிகார பலத்தில் இருந்த பாஜக, தனது அரசியல் நகர்வு காரணமாக ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் தற்போதைய தேர்தலில் பா.ஜ.க. 19 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும் , திரிணாமுல் காங்கிரஸ் உள்பட மற்ற கட்சிகள் 6 இடங்களில் முன்னிலை ஆம் ஆத்மி 3 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து கோவாவில் பா.ஜ.க. ஆட்சி மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது.
60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூரில் பா.ஜ.க. கூட்டணி 31 இடங்களில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் 6 இடங்களில் முன்னிலை பெற்றன. என்.பி.பி. கட்சி, சுயேட்சைகள் சேர்ந்து 23 இடங்களில் முன்னிலையில் இருந்தன. இதனையடுத்து பா.ஜ.க. ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளது. இதன் மூலம் 5 மாநில சட்டசபை தேர்தலில் பஞ்சாப் தவிர 4 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது.








