அத்தியாவசிய உணவுப் பொருட்களில் 5% ஜிஎஸ்டி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா போராட்டம் அறிவித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் தனியார் திருமண மண்டபத்தில் திருவொற்றியூர் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக 18-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில், காலை முதல் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா மற்றும் மண்டல குழு தலைவர் தனியரசு மற்றும் திருவொற்றியூர் பகுதியில் உள்ள ஏராளமான வியாபாரிகள் இதில் கலந்து கொண்டனர். அப்போது கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், பள்ளி மாணவ மாணவியர்களுக்குப் பைகள் வழங்கப்பட்டது.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்போடு இணைந்த திருவொற்றியூர் வியாபாரிகள் சங்க ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றதாகவும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீது ஐந்து சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் பிரதமர் இதில் தலையிட்டு பொது மக்களைப் பாதிக்கக்கூடிய வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அண்மைச் செய்தி: ‘‘போட்டி அரசாங்கத்தைப் பிரதமர் நடத்துகிறார்’ – நாராயணசாமி குற்றச்சாட்டு
அதேபோன்று மாநில அரசும் மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்த அவர், வியாபாரிகள் பல இடங்களில் தாக்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டு காவல்துறையினரை முடுக்கிவிட்டு வியாபாரிகளின் நலன் பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். மேலும், வியாபாரிகள் தாக்கப்பட்டால் காவல்துறையினர் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து சென்று தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ள வியாபாரிகளுக்கான தனி டோல் ஃப்ரீ நம்பரை அனைத்து வியாபாரிகளிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.








