பாம்பை கடிக்க வைத்து தொழிலதிபரை கொலை செய்த கொடூரம்: 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!

பாம்பை கடிக்க வைத்து உத்தரகாண்ட் தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவரை கைது செய்த போலீசார், 4 பேரை தேடி வருகின்றனர். கடந்த 15ம் தேதி டீன்பானி சாலையோராம் நிறுத்தப்பட்டிருந்த காரில் 30 வயதுடைய…

பாம்பை கடிக்க வைத்து உத்தரகாண்ட் தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவரை கைது செய்த போலீசார், 4 பேரை தேடி வருகின்றனர்.

கடந்த 15ம் தேதி டீன்பானி சாலையோராம் நிறுத்தப்பட்டிருந்த காரில் 30 வயதுடைய அங்கிட் சவுகான் என்ற தொழிலதிபர் இறந்து கிடந்தார். அந்த காரின் கதவுகள் அனைத்தும் பூட்டப்பட்டிருந்தன. இதனையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் பாம்பு விஷத்தால் உயிரிழந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

இதனையடுத்து இறந்தவரின் செல்போன் அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மகி என்ற பெண் ஒருவர் அவரிடம் அடிக்கடி பேசியது தெரியவந்தது. அந்த பெண்ணின் போன் அழைப்புகளை ஆய்வு செய்த போது, அவர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ரமேஷ் நாத் என்ற பாம்பு வளர்ப்பவரிடம் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து பாம்பு வளர்ப்பவரை கைது செய்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தொழிலதிபருடன் ரகசிய தொடர்பில் இருந்த அந்த பெண் பாம்பை வாங்கியதாக தெரிவித்தார். இதனிடையே தொழிலதிபரை மது அல்லது வேறு பானத்தை  அருந்த செய்து அவர் மயங்கியவுடன் உடம்பில் நாகப்பாம்பை போட்டு கடிக்க வைத்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதுதொடர்பாக 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.