உத்தரப் பிரதேசத்தில் கடந்த 10 நாட்களில் 45 குழந்தைகள் உட்பட 53 பேர் காய்ச்சலால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் கடந்த 10 நாட்களில் 45 குழந்தைகள் உட்பட 53 பேர் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். டெங்கு காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில் இது குறித்து விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சமீபத்தில் ஃபிரோசாபாத் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 6 வயது குழந்தை ஒன்று காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டது. இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக ஆக்ரா செல்லுமாறு மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியது. அதன்படி ஆக்ரா மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்ற பெற்றோர்களால் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. மருத்துவமனைக்கு செல்வதற்கு 10 நிமிடங்களுக்கு முன் குழந்தை உயிரிழந்துள்ளது.
இதனையடுத்து ஃபிரோசாபாத் அரசு மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர். எல்.கே.குப்தா கூறுகையில், “குழந்தைகள் திடீர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு டெங்கு பரிசோதனை மேற்கொண்டதில் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த மருத்துவமனையில் திடீர் காய்ச்சல் காரணமாக 186 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே போல சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளை செப்.6 வரை தற்காலிகமாக மூடுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று ஃபிரோசாபாத் அரசு மருத்துவக் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், குழந்தைகள் திடீர் உயிரிழப்புக்கான காரணங்களை கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையில் போதுமான எண்ணிக்கையில் மருத்துவர்கள், பணியாட்கள் இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக உயிரிழந்த குழந்தைகளின் இல்லங்களுக்கு சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் திடீரென 45 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.