தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட 43 பேர் புதிய அமைச்சர்களாக இன்று மாலை பதவியேற்க உள்ளனர். இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2019 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு, அமைச்சரவையில் இதுவரை மாற்றம் செய்யப் படவில்லை.
அடுத்த வருடம் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள உத்தர பிரதேச மாநிலத்தில், கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் சில நடவடிக்கைகளை பாஜக தலைமை எடுத்து வருகிறது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் இதுதொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. அதற்கேற்ப மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்க, பாஜக முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டது. மேலும் பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனா, சிரோமணி அகாலிதளம் ஆகிய கட்சிகள் விலகியதால் அந்தக் கட்சிகளில் சார்பில் இடம்பெற்றிருந்த மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். அவர்களின் பொறுப்புகள் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்களிடமே கொடுக்கப்பட்டன.
இந்நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்யவும், மாற்றி அமைக்கவும் பிரதமர் மோடி முடிவு எடுத்துள்ளார். இதையொட்டி அவர் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, மூத்த தலைவர்கள் அமித் ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி வந்தார். இந்நிலையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பதற்கு வசதியாக 12 மத்திய அமைச்சர்கள் தங்கள் பதவிகளை இன்று ராஜிநாமா செய்தனர்.
இந்நிலையில், 43 பேர் கொண்ட புதிய அமைச்சர்கள் பட்டியல் இன்று வெளியிடப் பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள் யார் யார்? அவர்கள் பற்றிய விவரம்:
1. நாரயண் ராணே, 2. சர்பானந்தா சோனாவால், 3. வீரேந்திர குமார், 4. ஜோதிராத்ய சிந்தியா, 5. ராமச்சந்திர பிரசாத் சிங், 6. அஸ்வினி வைஷ்ணவ், 7. பசுபதிகுமார் பராஸ், 8. கிரண் ரிஜிஜூ, 9. ராஜ்குமார் சிங், 10. ஹர்தீப் சிங் புரி, 11. மன்சுக் மண்டாவியா, 12. பூபேந்தர் யாதவ், 13. பர்சோத்தம் ருபாலா, 14. கிஷன் ரெட்டி, 15. அனுராக் சிங் தாகூர், 16. பங்கஜ் சவுத்ரி, 17. அனுப்பிரியா படேல், 18. சத்யபால் சிங், 19. ராஜீவ் சந்திரசேகர், 20. சுஷ்ஷி ஷோபனா கரண்டாலாஜே, 21. பானுபிரதாப் சிங் வர்மா, 22 தர்ஷன் விக்ரம் ஜர்தோஷ், 23. மீனாட்சி லேகி, 24. அன்னபூர்ணா தேவி, 25. ஏ.நாராயணசாமி, 26 கவுசல் கிஷோர், 27. அஜய் பட், 28. பி.எல் வர்மா, 29. அஜய்குமார், 30. சவுகான் தேவுசிங், 31. பகவந்த் குபா, 32. கபில் மோரேஸ்வர் பட்டீல், 33. சுஷ்ரி பிரதிமா பவுமிக், 34. சுபாஸ் சர்கார், 35. பகவத் கிருஷ்ணராவ் காரத், 36. ராஜ்குமார் ரஞ்சன், 37. பாரதி பிரவீன் பவார், 38. பிஸ்வேஷ்வர் துடு, 39. சாந்தனு தாகூர், 40., முஞ்சப்பாரா மகேந்திரபாபு, 41. ஜான் பார்லா, 42. எல்.முருகன், 43. நிஷித் பரமானிக்.







