அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து | சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூர் பகுதியில்
சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கார், 2 தனியார் தொழிற்சாலை பேருந்துகள், காலி மது பாட்டில்களை ஏற்றி வந்த லாரி என அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது.

தேசிய நெடுஞ்சாலையில் குதிரை ஒன்று சென்னை செல்லும் மார்க்கத்திற்கான சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் அடுத்தடுத்து பின்னால் வந்த 4 வாகனங்கள் விபத்தில் சிக்கியதாக தகவல் கிடைத்துள்ளது. காரில் வந்தவர்கள் பேருந்தில் வந்தவர்கள் என ஐந்துக்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் தற்போது ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.