பல்லடம் அருகே இரு பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கள்ளக்கிணறு பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்தார். இவரிடம் வெங்கடேசன் என்பவர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். குடியிருப்பு பகுதியில் வெங்கடேசன் மது அருந்தியதாகவும் அதை, செந்தில்குமாரின் உறவினரும் பாஜக பிரமுகருமான மோகன்ராஜ் உள்ளிட்டோர் தட்டிக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் செந்தில்குமார், அவருடைய உறவினர்கள் மோகன்ராஜ், புஷ்பவதி, ரத்தினாம்பாள் ஆகிய நான்கு பேரும் 3 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் வெங்கடேசன் உள்ளிட்ட மூவர் கொலை செய்துவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்ததும், கோவை மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
இரு பெண்கள் உட்பட நான்கு பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு அவர்களது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செந்தில்குமாரிடம் ஓட்டுநராக வேலை பார்த்த வெங்கடேசன் மற்றும் அவருடன் வந்த 2 பேரும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக போலீசாரின் முதல் கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. மேலும் மது குடிப்பதைத் தட்டிக் கேட்ட போது ஏற்பட்ட பிரச்னையை தொடர்ந்து கொலை செய்து விட்டு மூன்று பேரும் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. கொலையாளிகள் விட்டுச் சென்ற வாகனங்கள் மற்றும் சிசிடிவி., காட்சிகளை போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணரை வரவழைத்து போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
4 பேரின் உடல்களும் பல்லடம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யும் பணி நடந்து வருகிறது. இதனிடையே கோவை மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி தலைமையில், பல்லடம் அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அமைச்சர் சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உள்ளிட்டோர் பிரேத பரிசோதனை கூடத்தில் ஆய்வு செய்தனர். பல்லடம் அரசு மருத்துவமனையில் இதனால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இதற்கிடையே, இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த சின்னசாமி மகன் செல்லமுத்து(24) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.







