அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு: முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன்…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனுவை விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் எம்.பி.,எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்கள் மறுத்து விட்டன.

மேலும், ஜாமீன் மனுவை விசாரிக்க அதிகாரம் இருக்கிறதா? என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று வருமாறும் சிறப்பு நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யபட்டது. அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் முறையிட்டார்.

அப்போது, இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி ஆர்.சக்திவேல் ஏற்கனவே விலகிய நிலையில் இந்த முறையீட்டை எப்படி ஏற்பது ? என  நீதிபதி எம்.சுந்தர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, மாற்று அமர்வும் இன்று இல்லை என்பதால் தான் தங்களிடம் முறையிடுவதாகவும் நிர்வாகரீதியான உத்தரவை பிறப்பித்தால் கூட போதுமானது எனவும் தெரிவித்தார்.

எந்த வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு செய்வார் என கூறிய நீதிபதி எம்.சுந்தர், இந்த வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதியிடம் முறையிடுங்கள் எனவும் கூறினார். இந்த வழக்கில் இருந்து நீதிபதி ஆர்.சக்திவேல் விலகியதாக முறைப்படி உத்தரவு நகல் வழங்க வேண்டுமென என்.ஆர். இளங்கோ கேட்டுக் கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், முறைப்படி உத்தரவு பிறப்பித்தனர். மேலும், இந்த வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து பதிவுத்துறை முடிவெடுக்கும் எனவும் நீதிபதி எம்.சுந்தர் கூறியிருந்தார்.

இதனைதொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் உள்ளது என்பது குறித்து நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு இன்று விசாரித்தது. அப்போது நீதிபதிகள் வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதே தவறு என கூறினர். பின்னர் அனைத்து கோப்புகளையும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கே மாற்ற உத்தரவிட்டனர்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டப்படி மத்திய அரசால் முதன்மை அமர்வு நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது எனவும், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமாக அறிவித்த அரசாணை மத்திய அரசு சட்டத்துக்கு மேலானது அல்ல எனவும் தெரிவித்தனர்.

வழக்கை மாற்றிய உத்தரவை திரும்பப் பெற முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஜாமின் மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் எனவும் செந்தில் பாலாஜி மனு மீது நீதிபதிகள் சுரேஷ் குமார், குமரேஷ் பாபு அமர்வு உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.