விலைவாசி உயர்வு – மக்களவையில் விவாதம்

காங்கிரஸ் கட்சி எம்பிக்களுக்கு எதிரான இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, விலைவாசி உயர்வு தொடர்பாக மக்களவையில் விவாதம் நடைபெற்றது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த ஜூலை 18ம் தேதி தொடங்கியது. கடந்த 2…

காங்கிரஸ் கட்சி எம்பிக்களுக்கு எதிரான இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, விலைவாசி உயர்வு தொடர்பாக மக்களவையில் விவாதம் நடைபெற்றது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த ஜூலை 18ம் தேதி தொடங்கியது. கடந்த 2 வாரங்களாக நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்று நாடாளுமன்றம் கூடியதும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக முதலில் 12 மணி வரையிலும் பின்னர் 2 மணி வரையிலும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர்களுடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது, மக்களவையில் விவாதம் நடைபெற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அப்போது, மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் 4 பேருக்கு எதிரான நடவடிக்கை திரும்பப் பெறப்பட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இதையடுத்து 4 பேர் மீதான நடவடிக்கையை திரும்பப் பெறுவதாக ஓம் பிர்லா அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, இடைநீக்கம் செய்யப்பட்ட மாணிக் தாகூர், ஜோதி மணி, ரம்யா ஹரிதாஸ், பிரதாபன் ஆகியோர் அவை நடவடிக்கையில் பங்கேற்றனர்.

இதன் பின்னர் மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது.

இதனிடையே, மாநிலங்களவையில் விலைவாசி உயர்வு குறித்து நாளை விவாதிக்க அரசு தயார் என்று அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.