இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லிஸ்டிரஸ் குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கை தோற்கடித்து கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் லிஸ் டிரஸ் இங்கிலாந்தின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் நாளை இங்கிலாந்தின் பிரதமாராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லிஸ்டிரஸ் 1975-ல் ஆக்ஸ்போர்டில் பிறந்தவர். ஆக்ஸ்போர்டில் உள்ள மெர்டன் கல்லூரியில் அரசியல், தத்துவம் மற்றும் பொருளாதாரம் பிரிவில் பட்டம் பெற்ற அவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக லிபரல் டெமாக்ராஸின் தலைவராக இருந்தார். லிஸ் டிரஸ் கணக்காளரான ஹக் ஓ லியரி என்பவரை மணந்தார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
1996-ம் ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சியில் இணைந்தார். 2001 மற்றும் 2005-ல் மேற்கு யார்க்ஷயரில் இரண்டு இடங்களில் போட்டியிட்டு தோல்வியடைந்த லிஸ் டிரஸ் 2006 இல், அவர் கிரீன்விச்சில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2010ல் தென்மேற்கு நார்போக்கின் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் பெண்கள் அதிகாரம் போன்ற முக்கியமான துறைகளில் பணியாற்றியுள்ளார்.
அதனை தொடாந்து லிஸ் டிரஸ், கல்வி அமைச்சராகவும், சுற்றுச்சூழலுக்கான மாநிலச் செயலாளராகவும், நீதித்துறை செயலாளராக, கருவூலத்தின் முதன்மைச் செயலாளராகவும், சர்வதேச வர்த்தகத்திற்கான மாநிலச் செயலாளராகவும், வர்த்தக வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
2019 ஆம் ஆண்டில், அவர் சர்வதேச வர்த்தகத்திற்கான மாநிலச் செயலாளராகவும், வர்த்தக வாரியத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்திருந்தார். 2021 இல், வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
பிரதமராக தேர்வு செய்யப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய லிஸ்டிரஸ், கடும் போராட்டத்திற்கு பிறகு பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். போரிஸ் ஜான்சன், ரிஷி சுனக் ஆகியோருக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான திட்டம் செயல்படுத்தப்படும். எனது புதிய நிர்வாகத்தின் முதல் வாரத்தில் எரிசக்தி கட்டணங்கள் மற்றும் எரிசக்தி விநியோகம் தொடர்பான உடனடி நடவடிக்கையை அமைக்க திட்டமிட்டுள்ளேன் என்று கூறினார்.









